மோனிஷா: நடிப்பதற்குப் பயப்படவே கூடாது

3 mins read
b25689df-d3b5-4b32-bdf3-f15b0dac6214
மோனிஷா. - படம்: ஊடகம்

தமிழ் சினிமாவில் கதாநாயகனின் சகோதரி கதாபாத்திரத்துக்கு எப்போதுமே முக்கியத்துவம் அளிக்கப்படும். அதனால் அத்தகைய கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன்,” என்கிறார் மோனிஷா பிளெஸ்ஸி.

மலையாளக் கரையோரத்தில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வந்துள்ள இவருக்கு ‘மாவீரன்’ படம் நல்ல துவக்கமாக அமைந்துள்ளது.

“சிவகார்த்திகேயனின் சகோதரியாக நடிக்க விருப்பமா என்று கேட்ட உடனேயே சம்மதித்துவிட்டேன். அவருடன் இணைந்து நடிப்பது மட்டுமல்லாமல் தமிழில் எனது அறிமுகப்படமாகவும் அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி,” என்கிறார் மோனிஷா.

தங்கை, அக்கா வேடம் என்றால் திரையில் தோன்றும் காட்சிகள் குறைவாக இருக்கும் என்று சிலர் கூறினராம். ஆனால் மோனிஷா அதை ஏற்பதாக இல்லை.

“இது தவறான புரிதல். கதையின் தன்மைக்கு ஏற்பவே சகோதரி கதாபாத்திரங்களுக்கான முக்கியத்துவம் அமையும். சில படங்களில் தங்கை வேடத்தில் நடித்தவர்கள் படத்தின் இறுதிக்காட்சி வரை நடித்துள்ளதைப் பார்த்திருப்பீர்கள். ‘மாவீரன்’ படத்தில் எனக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது,” என்று சொல்லும் மோனிஷா, தங்கையாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களில் நடிக்கவும் தயாராக உள்ளாராம்.

இவரது திரைப் பிரவேசம் எளிதில் நடந்துவிடவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக திரையுலகில் அறிமுகமாக முயற்சி செய்து வந்ததாகச் சொல்கிறார். பலமுறை நடிப்புத் தேர்வுகளில் பங்கேற்றபோதும் எதிலும் தேர்ச்சி பெற முடியவில்லை. எனினும் நம்பிக்கையை மட்டும் இழந்து விடவில்லை என்கிறார்.

“நடிப்பின் மீது எனக்கு உள்ள ஆர்வம்தான் இதற்குக் காரணம். தொடர்ந்து முயற்சி செய்ததன் பலனாக எனக்கான வாய்ப்புகள் இப்போது கிடைத்து வருகின்றன.

“சிவகார்த்திகேயனுடன் நடிப்பது ஒருபக்கம் மகிழ்ச்சி அளித்த போதிலும், மாவீரன் படப்பிடிப்பின் முதல் நாளன்று பயந்து நடுங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் சரிதா, மிஷ்கின் போன்ற அனுபவக் கலைஞர்கள் என்னிடம் அன்பாகப் பேசி பதற்றத்தைக் குறைத்தனர்.

“மூத்த கலைஞர்களைப் பார்த்து பயப்படுவதைவிட, அவர்களிடம் கற்றுக்கொள்ள ஏராளமான நுணுக்கங்கள் உள்ளன என்பதை உணர்ந்தால் சிக்கல் இல்லை. இந்தப் படத்தில் நடித்தபோது அந்த உண்மையை உணர்ந்தேன்.

“மூத்த நடிகை என்றாலும்கூட சரிதா மிக இயல்பாக ஒரு தோழியைப் போல் பேசிப் பழகினார். அவர் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் பெற்ற அனுபவங்களை என்னுடன் அவ்வப்போது பகிர்ந்துகொள்வார். அவற்றை எல்லாம் கேட்க வியப்பாக இருக்கும்.

“எந்த காட்சியாக இருந்தாலும் முதல் முயற்சியிலேயே கச்சிதமாக நடித்துவிடுவார். அவரது கண் அசைவும் முக பாவங்களும் அருகில் இருந்து பார்க்கும்போது பிரமிக்க வைக்கும்.

“சிவகார்த்திகேயன் அண்ணாவைப் பொறுத்தவரை மிகவும் நல்ல மனிதர். சின்னத்திரையில் இருந்து தாம் திரையுலகில் அறிமுகமாகி வளர்ந்து வந்த கதையை பகிர்ந்து கொண்டார்.

“சின்னத்திரை, வெள்ளித்திரை ஆகிய இரண்டிலும் தொடர் வாய்ப்புகளைப் பெற்று வந்த போது எவ்வாறு சமாளிக்க முடிந்தது என்பதையும் விவரித்தார். அவற்றை என்றும் மறக்க இயலாது.

“பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘குக்கு வித் கோமாளி’யில் பங்கேற்றுள்ளேன். அப்போது சிவகார்த்திகேயன் அண்ணா கூறியதுதான் நினைவுக்கு வந்தது. அதற்கேற்ப நேர மேலாண்மை செய்து பணியாற்றி வருகிறேன்.

“தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நொடியும் நிமிடமும்தான் நமக்குரியது. அதுதான் நிஜம் என்று சிவா அண்ணா அடிக்கடிச் சொல்வார். அதை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்,” என்கிறார் மோனிஷா.

சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததும் சிவகார்த்திகேயனிடம்தான் முதலில் விவரம் தெரிவித்தாராம். திரையுலகில் அறிமுகமான நிலையில், தொலைக்காட்சியில் கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்கலாமா என்று ஆலோசனையும் கேட்டுள்ளார்.

“இது நல்ல வாய்ப்பு என்று சிவா அண்ணா கூறினார். இரு வெவ்வேறு தளங்களில் மாறுபட்ட வாய்ப்புகளை ஏற்றுச் செயல்படுவதன் மூலம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

“எனவே, நல்ல வாய்ப்புகளை ஏற்கும்போது நேரமின்மை, அதிக உழைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தலைதூக்கும் என்றாலும், அவற்றின் முடிவில் நம்மால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றும் அறிவுரை கூறினார்,” என்கிறார் மோனிஷா.

தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்துள்ள அவர், ஒரே மாதிரியான வேடங்களில் நடிக்க விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்