கடந்த சில ஆண்டுகளாக தன் படங்களின் மூலம் தீவிரமான அரசியலை பேசி வந்த விஜய், மெல்ல மெல்ல திரைப்படங்களைத் தாண்டி உண்மையான அரசியலில் இறங்கவும் முடிவு செய்திருக்கிறார்.
அவரின் அண்மைய செயல்களைப் பார்க்கும்போது அவருடைய அரசியல் பிரவேசம் வெகு விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது. மேலும் தன் மக்கள் இயக்கத்தை விஜய் அரசியல் கட்சியாக விரைவில் மாற்றுவார் என்றும் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ படத்தில் நடிக்க இருக்கின்றார். படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில் இந்தியத் திரையுலகமே விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தை ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ‘டிஜிட்டல் ரைட்ஸ்’ மற்றும் ‘சாட்டிலைட் ரைட்ஸ்’ என பல கோடிகளுக்கு வியாபாரம் ஆகியுள்ளது.
மேலும் இப்படம் வெளியான பிறகு ஆயிரம் கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதையடுத்து விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ரூ.200 கோடி சம்பளம் வாங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய் ‘தளபதி 68’ படத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகள் நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்க இருப்பதாகவும் பேசப்படுகிறது. ஆனால், இந்த தகவலில் எந்தளவிற்கு உண்மை உள்ளது எனத் தெரியவில்லை. விஜய் விரைவில் அரசியலில் களமிறங்க இருப்பதால்தான் நடிப்பில் இருந்து சில காலம் விலக இருக்கின்றார் என்று கூறப்படுகிறது.
விஜய் தன் புது கட்சியை வருகின்ற செப்டம்பர் மாதம் துவங்க இருப்பது அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடத்தான் என்று கூறுகின்றனர்.
அவ்வாறு விஜய் கட்சியைத் துவங்கினால் அந்த செய்தி இந்தியா அளவில் முக்கிய செய்தியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த மாதம் விஜய் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியது பலராலும் பாராட்டப்பட்டு வந்தது.
தொடர்புடைய செய்திகள்
மேலும் விஜய் இவ்வாறு தொடர்ந்து செயல்பட்டால் அவரை அரசியலிலும் நாங்கள் ஆதரிப்போம் என பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அவர் செப்டம்பர் மாதம் கட்சி துவங்கவுள்ளார் என்ற செய்தி தற்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் பரவலாக பேப்பட்டு வரும் செய்தி குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் மலேசியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி முடித்துவிட்டு சென்னை திரும்பிய யுவன், செய்தியாளர்களிடம், “நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜய் படத்திற்கு இசையமைக்க ஆர்வமாக இருக்கிறேன். விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம்,” என்று தெரிவித்தார்.
லியோ’ படத்தில் இடம்பெற்ற ‘நா ரெடி’ பாடல் வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. இந்நிலையில் லியோ படத்தின் வெளியீட்டு உரிமை குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் தெலுங்கு திரையரங்க உரிமையை பிரபல நிறுவனமான ‘சித்தாரா என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் வாங்கியுள்ளதாக படக்குழு சுவரொட்டி வெளியிட்டு அறிவித்துள்ளது.

