இந்திய திரையுலகில் அதிக வருமான வரி செலுத்தும் நடிகைகளின் பட்டியலில் தீபிகா படுகோன் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து இவர், ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் வரி கட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போது ஒரு படத்துக்கு ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை அவர் ஊதியம் வாங்குவதாகக் கூறப்படுகிறது.
அண்மைய வெற்றிப் படங்களை அடுத்து ஊதியம் மேலும் அதிகரிக்க அவர் முடிவு செய்திருப்பதாகத் தகவல்.
மேலும், விளம்பரங்களில் நடிப்பதன் மூலமாகவும் ஆண்டுதோறும் சுமார் 40 கோடி ரூபாய் சம்பாதிப்பதாகவும் தீபிகாவின் மொத்த சொத்து மதிப்பு ஐநூறு கோடி ரூபாய் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அதிக வருமான வரி செலுத்தும் நடிகைகளின் பட்டியலில் ஆலியா பட் இரண்டாம் இடத்தில் உள்ளார். அவர் ஆண்டுதோறும் ஆறு கோடி ரூபாய் வரி செலுத்துகிறார்.
திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அதிகமான வருமான வரி செலுத்தி வருகின்றனர். நடிகர்களில் அக்ஷய்குமார், ஷாருக்கான், சல்மான் கான், ரஜினி, கமல்ஹாசன் உட்பட பலர் கோடிக்கணக்கில் வருமான வரி செலுத்துகின்றனர்.

