சிவா: தோற்றுப் போயிருந்தால் ஊதியம்கூட கிடைத்திருக்காது

2 mins read
64b2b0ab-93dc-4a30-9b28-2ca7b8caf7cd
‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர். - படம்: ஊடகம்

விஜய் சேதுபதிக்கும் தமக்கும் இடையே போட்டி நிலவுவதாக கூறப்படுவதை மறுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

மக்களைச் சிரிக்க வைத்து மகிழ்விக்கும் கலைஞனாக இருப்பதில் தமக்கு மிகுந்த மனநிறைவு ஏற்படுவதாக சென்னையில் நடைபெற்ற ‘மாவீரன்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

நிறைய வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், ‘மாவீரன்’ படத்தின் வெற்றி தமக்குக் கூடுதல் சிறப்பு வாய்ந்தது என்று குறிப்பிட்ட அவர், இந்தப் படத்தில் தன் நடிப்பு மிக நன்றாக இருப்பதாக ஊடகங்களிடம் இருந்து பரவலாகப் பாராட்டுகள் கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

“நான் பல குரல்களில் பேசக்கூடியவன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ‘மிமிக்ரி’ செய்து முன்னேற முயற்சி செய்தவன். நகைச்சுவையை மட்டுமே நம்பி திரையுலகில் அறிமுகமானேன். அதன் பிறகு படிப்படியாக நடிப்பில் இந்தக் கட்டத்திற்கு வந்துள்ளேன்.

“மக்களை மகிழ்விக்கும் கலைஞனாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அது மட்டுமே இருந்தால் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு குறைந்துவிடும். ஒரு நடிகனிடம் இருந்து நல்ல நடிப்பைப் பெறு வதற்கு இயக்குநர்களும் மெனக்கெட வேண்டும். அப்படிப்பட்ட இயக்குநராக ‘மாவீரன்’ படத்தின் மூலம் எனக்கு இயக்குநர் மடோன் அஸ்வின் கிடைத்துள்ளார்,” என்றார் சிவகார்த்தி கேயன்.

மடோன் விருப்பப்பட்டால் அவருடன் இணைந்து பணியாற்றத் தயார் என்று குறிப்பிட்ட அவர், தம்மை இதுவரை இயக்கி உள்ள அனைத்து இயக்குநர் களுமே தன்னிடம் உள்ள ஏதாவது ஒரு சிறப்பம்சத்தை திரையில் வெளிப்படுத்த மனதார உதவி உள்ளதாகத் தெரிவித்தார்.

மடோன் அஸ்வினுடைய திறமையை மட்டுமே நம்பி ‘மாவீரன்’ படத்தை உருவாக்கினோம் என்றும் ஒருவேளை இப்படம் தோல்வியைத் தழுவி இருந்தால் தமக்கு ஊதியம்கூட கிடைத்திருக்காது என்றும் சிவகார்த்தி கேயன் கூறினார்.

“இந்தப் படத்தின் வெற்றிக்கு தமது குரல் மூலம் பங்களித்துள்ளார் விஜய் சேதுபதி. எனக்கும் அவருக்கும் இடையே போட்டி நிலவுவதாகச் சொல்கிறார்கள்.

“அப்படியெல்லாம் எந்தப் போட்டியும் கிடையாது. அவரது நடிப்பை வெகுவாக ரசிப்பேன். விஜய் சேதுபதியின் குரலைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் இயக்குநர் மடோன் அஸ்வின் உறுதியாக இருந்தார். எனக்கு விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் ஆசை உண்டு. மிக விரைவில் அந்த ஆசை நிறை வேறும் என நம்புகிறேன்,” என்றார் சிவகார்த்திகேயன்.

‘மாவீரன்’ படம் வெளியீடு கண்ட நான்கு நாள்களில் 50 கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்