நல்ல மகள், மனைவி, தாய், நடிகை என வாழ்க்கையில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று தாம் கவனமாகச் செயல்பட்டு வந்துள்ளதாகவும் இனிமேலும் தனது பயணம் கச்சிதமாக நீடிக்கும் என்று நம்புவதாகவும் சொல்கிறார் காஜல் அகர்வால்.
நாள்தோறும் தாம் சந்திக்கும் பல தரப்பட்ட மக்களிடம் இருந்து நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்வதாக அண்மைய பேட்டியில் இவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது இயல்பான நடிப்பால் தென்னிந்திய ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வளர்ந்தவர் காஜல். தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நாயகிகளில் ஒருவரான இவருக்கு திருமணத்துக்குப் பிறகும் நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றன.
தற்போது கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ படத்திலும் தனி நாயகியாக ஒரு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தனது திரைப்பயண அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் விரிவாகப் பேசியுள்ளார் காஜல்.
அதில் திரையுலகில் தனக்கு சமந்தாவும் தமன்னாவும்தான் நெருக்கமான தோழிகள் என அவர் குறிப்பிட்டுள்ளார். மூவரும் அனைத்து விஷயங்கள் குறித்தும் வெளிப் படையாகப் பேசிக்கொள்வார்களாம். தங்களுக்குள் எந்தவிதமான ஒளிவுமறைவும் இல்லை என்றும் இந்த ஆழமான நட்பு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது என்றும் சொல்கிறார் காஜல்.
“நல்ல தோழிகள் அமைந்தால் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் பாதியாகக் குறைந்துவிடும். எனது சொந்த அனுபவங்களை வைத்து இவ்வாறு சொல்கிறேன்.
“எனது திரைப்பயணத்தின் தொடக்கத்தில் சிறப்பம்சம் என்று குறிப்பிட ஏதும் இல்லை. சாதாரண நடிகையாகத்தான் அறிமுகமானேன். பிறகு படிப்படியாக முன்னேறி பெரிய நடிகர்களுடன் நடிக்கத் தொடங்கினேன்.
“இப்போது கமல்ஹாசன் போன்ற சாதனையாளருடன் நடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நான் பணியாற்றிய அனைத்து கதாநாயகர்களிடம் இருந்தும் ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தைக் கற்றுக்கொண்டதாகச் சொல்வேன்.
தொடர்புடைய செய்திகள்
“நாம் நாள்தோறும் பலதரப்பட்டவர்களைச் சந்திக்கிறோம். அவர்களிடம் உள்ள நிறைகுறைகள் நமக்குத் தெரியவரும். அப்போது குறைகளைத் தவிர்த்துவிட்டு நல்ல அம்சங்களை மட்டும் கவனிக்க வேண்டும். இதுதான் எனது கொள்கை,” என்கிறார் காஜல்.
இவர் செல்லப்பிராணிகள் மீது மிகுந்த அன்பு பாராட்டுகிறார். தனது நாய்க்குட்டிக்கு ‘காஜூ’ என்று பெயர் சூட்டியுள்ளார்.
திரையுலகில் அறிமுகமாகும் முன்பு ஊடகத்துறை சார்ந்த பட்டப்படிப்பை மேற்கொண்டாராம். ஆனால் விளம்பரத் துறையில் வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியதும் படிப்பைக் கைவிட நேர்ந்தது என்கிறார்.
காஜலின் தந்தை வினய் அகர்வால் ஜவுளி வியாபாரி. எப்போதும் தொழிலில் மூழ்கி இருப்பவர் என்பதால் தாயார்தான் காஜலுக்கு எல்லா வகையிலும் குருவாகச் செயல்பட்டுள்ளார்.
“அம்மாவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அதனால் அவர்தான் எனது வழிகாட்டி என்று தயங்காமல் சொல்வேன். இன்றுவரை என்னை சின்னக் குழந்தையைப் போல் பார்த்துக் கொள்கிறார். திருமணமாகி நானே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளேன். ஆனால் இன்னமும்கூட எனது தாயாருக்கு நான் சின்னக் குழந்தைதான். திருமணமானதால் பெற்றோரை விட்டு விலகி இருக்கிறேன் என்ற எண்ணம் சிறிதளவுகூட வரவிடமாட்டார்.
“மகன் நீல் எனக்கு கொடுத்துள்ள தாய்மை அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒரு குழந்தைக்குத் தாயான பிறகே ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுமையடையும் என்பதை உணர்கிறேன்,” என்று சொல்லும் காஜலுக்கு இனிப்புகள் என்றால் ரொம்பப் பிடிக்குமாம்.
பல்வேறு உணவு வகைகளை ருசிக்க வேண்டும் என்று விரும்புவதாகச் சொல்பவர், தாய்லாந்து, ஜப்பான், வியட்நாம் நாட்டு உணவு வகைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார்.
“எந்த வகை ஐஸ்கிரீம் என்றாலும் யோசிக்காமல் சாப்பிடுவேன். லண்டனில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் எனது உருவத்திலான மெழுகுச்சிலை உள்ளது. தென்னிந்திய நடிகைகளில் எனக்கு மட்டுமே வாய்த்துள்ள பெருமை இது.
“எனினும் இதன் காரணமாக எனது பொறுப்புகள் அதிகரித்திருப்பதாகவும் உணர்கிறேன். கிடைத்த கௌரவத்தை காப்பாற்றிக்கொள்வது முக்கியம்,” என்கிறார் காஜல் அகர்வால்.

