‘டிடி ரிட்டர்ன்ஸ்’: பேய்களுடன் விளையாடும் சந்தானம்

2 mins read
4cde8564-8f8b-4615-b44a-75f16e2b9322
‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் சுவரொட்டி. - படம்: ஊடகம்

பல குரல்களில் பேசுவதில் நடிகர் சந்தானம் கெட்டிக்காரர். தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர், பிறகு திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று கதாநாயகனாக வலம் வருவது அனைவருக்கும் தெரிந்த கதை.

இப்போது ‘‘மிமிக்ரி’ செய்வதை மறந்துவிட்டதாகச் சொல்கிறார்.

“நான் பங்கேற்ற ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் உடன் நடிப்பவர்களைப் போன்று பேசிக் காட்டுவேன். அவர்களுடைய உடல்மொழியை நகைச்சுவையாக வெளிப்படுத்துவேன்.

“அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும் நமக்கென்று தனி அடையாளம் வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர் அதுபோன்ற முயற்சிகளை விட்டுவிட்டேன்.

“நான் நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் காவல் நிலையத்தில் விடியவிடிய ‘மிமிக்ரி’ செய்வது போன்ற ஒரு காட்சி இருக்கும். அது நிஜத்தில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் உருவான காட்சி.

“நான் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது இரவு படப்பிடிப்பு முடிவடைந்து நண்பர் ஒருவருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில் காவல்துறையினர் நிறுத்தி விசாரித்தனர்.

“அப்போது படப்பிடிப்பு முடிவடைந்து வீடு திரும்புவதாகக் கூறியதும், என்னை அடையாளம் கண்டுகொண்டு பல குரலில் பேசுமாறு கேட்டுக்கொண்டனர். அதன் பிறகு அருகருகே உள்ள பகுதிகளில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த மற்ற காவலர்களையும் அங்கே வரவழைத்தனர். இப்படி அதிகாலை மூன்று மணிவரை அனைவரும் என் நடிப்பையும் ‘மிமிக்ரி’யையும் ரசித்து மகிழ்ந்தனர்.

“இதைத்தான் திரைப்படத்தில் ஒரு காட்சியாக வைத்தோம்,” என்று சொல்லும் சந்தானம் தற்போது ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

பேய்களோடு மனிதர்கள் விளையாடும் ஓர் ஆட்டம் என்பதுதான் இப்படத்தின் ஒருவரிக் கதை.

“இயக்குநர் பிரேம் ஆனந்த் இந்தப் படத்தைப் பற்றிப் பேசியபோது, எப்படி வித்தியாசமாக செய்ய முடியும் என விவாதித்தோம். புது மாதிரியாக இருந்தால் முயன்று பார்க்கலாம் என்று முடிவுக்கு வந்தோம்.

“பேய்களோடு சேர்ந்து விளையாடுவதை மையமாக வைத்து அவர் கதை சொன்ன விதம் பிடித்துப்போனது.

“நல்ல வேடிக்கையாக, கேளிக்கையாக இருந்ததால் நடிக்கச் சம்மதித்தேன். கிரிக்கெட் விளையாடும் நம்ம மகேந்திர சிங் டோனியே திரைப்படம் தயாரிக்கிறார். எனவே நாம் ஏன் திரையில் விளையாடக்கூடாது என்று தோன்றியது.

“குழந்தைகளும் பார்க்கக் கூடிய ஜாலியான படமாக உருவாக்கி உள்ளோம். வழக்கமாக பேய் என்றால் பழிவாங்கும் என்பார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை திரையில் காட்டுவார்கள். இதையெல்லாம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தில் தவிர்த்துவிட்டோம்.

“பேய்க்கும், நமக்கும் இடையே ஒரு போட்டி. அதில் வெற்றி பெற வேண்டும். இல்லையெனில் இறக்க நேரிடும் என்கிற ரீதியில் கதை நகரும். அதனால் தொடக்கம் முதல் இறுதிவரை படம் விறுவிறுப்பாக நகரும்,” என்கிறார் சந்தானம்.

குறிப்புச் சொற்கள்