‘லவ்டுடே’ என்ற ஒரே படத்தின் மூலம் இளையர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் இளம் நாயகி இவானா.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர் அறிமுகமானது மலையாள மொழியில் என்றாலும் தமிழில் முன்னணி நடிகையாக [Ϟ]வேண்டும் என விரும்புகிறார்.
மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ள இவானா தமிழில் ‘நாச்சியார்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
“சிறு வயதில் நடிகையாக வேண்டும் என்று நான் விரும்பியதே இல்லை. பள்ளிப் படிப்பை முடித்த கையோடு கணக்காளர் (சார்ட்டட் அக்கவுண்ட்டன்ட்) ஆக விரும்பினேன். ஆனால் நடிகையாகும் வாய்ப்பு கைகூடி வந்தது.
“ஒரு மலையாளப் படத்தில் கதாநாயகனின் தங்கையாக நடித்திருந்தேன். அதன் புகைப்படங்கள் சில பத்திரிகைகளில் வெளிவந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு இயக்குநர் பாலாவின் உதவியாளர்கள் தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு பேசினர்.
“அவரது இயக்கத்தில் நடிக்க யாரும் தயங்கப் போவதில்லை. நானும் உடனடியாக ஒப்புக்கொண்டேன். எங்கள் வீட்டிலும் சினிமாவில் நடிக்க மறுப்பு சொல்லவில்லை.
“நான் நன்றாக படிக்கிற பெண். எனவே படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பது மட்டுமே வீட்டில் உள்ளவர்களின் கவலை. பள்ளித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் போதும் என்று அவர்கள் கூறியது வசதியாகிப் போனது. என்னால் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியும் என்று உறுதியளித்ததும் திரைத்துறையில் பணியாற்ற சம்மதம் தெரிவித்தனர். எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் எனது திரைப்பயணம் தொடங்கியது. இன்றுவரை தடைகளின்றி நீடிக்கிறது,” என்கிறார் இவானா.
கடந்த 2012ஆம் ஆண்டு மலையாளத்தில் ‘மாஸ்டர்ஸ்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவரது நடிப்பில் அடுத்து அடுத்து வெளியாகிறது ‘எல்ஜிஎம்’ படம்.
தொடர்புடைய செய்திகள்
“இது கிரிக்கெட் வீரர் டோனி தயாரிக்கும் படம் என்பது அனைவருக்கும் தெரியும். ஹரீஷ் கல்யாண் ஜோடியாக நடிக்கிறேன். ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.
“இது பயணம் சம்பந்தப்பட்ட கதை. ரசிகர்களை மகிழ்விக்கும் அளவுக்கு ஜாலியான, பொழுதுபோக்குப் படமாக இருக்கும்,” என்கிறார் இவானா.
சிவகார்த்திகேயன், ஜோதிகா ஆகியோருடன் இணைந்து நடித்த அனுபவத்தை மறக்கவே இயலாது என்று குறிப்பிடுபவர், இருவருமே பழகுவதற்கு எளிமையானவர்கள் என்கிறார்.
“நான் ஜோதிகாவின் தீவிர ரசிகை. அவர் நடித்துள்ள ‘குஷி’, ‘சந்திரமுகி’ படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான படங்கள். ஒரு ரசிகையாக அவரை வியந்து பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அவருடன் சேர்ந்து நடிக்கப்போகிறோம் என்றதும் என்னையும் அறியாமல் பதற்றம் ஏற்பட்டது. ஆனால், அது தேவையற்றது என்பதை அவர் உணர வைத்தார்.
“எந்தவிதமான பந்தாவும் இன்றி எளிமையாகப் பேசினார். என்னை அமைதிப்படுத்தியதோடு பல்வேறு நுணுக்கங்களையும் கற்றுக்கொடுத்தார்.
“அடுத்து ‘ஹீரோ’ படத்தில் சிவகார்த்தி கேயனுடன் இணைந்து நடித்தேன். அவர் எல்லாருடனும் ஜாலியாக பழகக்கூடியவர். அவர் படப்பிடிப்பில் இருந்தால் சிரிப்புக்குப் பஞ்சமிருக்காது.
“அவருக்குள் ஒரு பெரும் வலிமை இருப்பதாக நம்புகிறேன். அவரிடம் உள்ள நேர் மறைச் சிந்தனைகள் அனைத்துமே மற்றவர்களிடமும் தொற்றிக்கொள்ளும். படப்பிடிப்பில் பங்கேற்கும் அனைவரையும் கவலைகளை மறந்து சிரிக்க வைப்பார்,” என்று சொல்லும் இவானா, ‘லவ்டுடே’ படத்தின் பிரம்மாண்ட வெற்றி தாம் எதிர்பாராத ஒன்று என்கிறார்.
“அந்தப் படத்தில் நடிக்கும்போதே வெற்றிக்குரிய படைப்பு என்று தோன்றியது. ஆனால், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. அதிலும் வசூல் ரீதியில் பெற்றுள்ள வரவேற்பு நான் சற்றும் எதிர்பாராத ஒன்று.
“என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. எல்லாவற்றையும்விட இயக்குநர் பாலா தொடர்புகொண்டு பாராட்டினார். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை,” என்று சொல்லும் இவானா, சில படங்களில் மட்டுமே நடித்தாலும், அவை சிறந்த படங்களாக இருக்க வேண்டும் என்கிறார்.
நல்ல கதை என்பது அதில் நாம் நடிக்க வேண்டும் என்ற ஆசையையும் வேட்கையையும் தூண்ட வேண்டும் என்று குறிப்பிடுபவர், எந்தக் காரணத்தை முன்னிட்டும் கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்கிறார்.

