தன்னிடம் உள்ள அனைத்துத் திறமைகளையும் வெளிப்படுத்த விரும்புவதாகச் சொல்கிறார் இளம் நாயகி கிரிஷா குரூப்.
மேலும் பல்வேறு கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவதாகவும் ஊடகப் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
‘கூட்டாளி’, ‘கோலிசோடா 2’, ‘கிளாப்’, ‘ஜோதி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் கிரிஷா குரூப். மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ள நிலையில், மாறுபட்ட கதாபாத்திரங்கள் அமைவது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார்.
நடனம், சங்கீதம், ஓவியம், யோகா எனப் பல்வேறு கலைகளைக் கற்றுத் தேர்ந்துள்ளார் கிரிஷா.
“கடந்த இருபது ஆண்டுகளாக எனது குருநாதரிடம் பரதநாட்டியம் கற்று வருகிறேன். ஏராளமான நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். இது தவிர இந்துஸ்தானி இசையில் நன்றாகப் பாடுவேன். அதற்காகவும் பயிற்சி பெறுகிறேன். மகாராஷ்டிர அரசின் அங்கீகாரம் பெற்ற பாடகிகளின் பட்டியலில் என் பெயரும் உள்ளது.
“ஓவியம் தீட்டுவதிலும் எனக்கு ஆர்வம் உண்டு. நான் வரைந்த ஏராளமான ஓவியங்கள்தான் என் வீட்டுச் சுவர்களை அலங்கரிக்கின்றன. தினமும் யோகாசனம் செய்கிறேன். பொதுவாக எனக்கு பல்வேறு கலைகளைக் கற்றுக்கொள்ள பிடிக்கும்,” என்று சொல்லும் கிரிஷாவின் பூர்வீகம் கேரளா என்றாலும் வளர்ந்து ஆளானது மும்பையில் தானாம்.
விளம்பரத் துறையில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். அடுத்து மனோதத்துவ துறையில் பட்ட மேற்படிப்பை மேற்கொண்டுள்ளார்.
“எனது பரதநாட்டிய நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு சிலர் திரையுலகில் அறிமுகமாக விருப்பமா என்று கேட்டு அணுகினர். முதலில் லேசாகத் தயங்கினேன். அதன் பிறகு நடிக்கச் சம்மதித்தேன். அப்படித்தான் எனது முதல் படமான ‘அழகு குட்டி செல்லம்’ பட வாய்ப்பு அமைந்தது.
தொடர்புடைய செய்திகள்
“சமூக வலைத்தளங்கள் மூலமாக வாய்ப்பு கிடைத்தது என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்ததால் பணம் சம்பாதிக்க திரையுலகில் அறிமுகமானதாகச் சிலர் கூறுகின்றனர். அது உண்மையல்ல.
“எனக்கு நடிப்பில் ஆர்வம் உள்ளது. நல்ல, சவாலான படங்கள் அமையும்போது நன்றாக நடிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கிறது. கிளாப் படத்தில் பாக்கிய லட்சுமி, கோலி சோடா 2 படத்தில் மதி, அழகு குட்டி செல்லம் படத்தில் இளம் கர்ப்பிணிப் பெண் நிலா என ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட பாத்திரங்கள் அமைந்ததை எனது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
“ஒரு படத்தின் அடையாளமாக என்னுடைய கதாபாத்திரங்கள் அமைய வேண்டும் என்பதே எனது ஆசை. இதுவரை அப்படித்தான் நடந்து வந்துள்ளது,” என்று சொல்லும் கிரிஷா குரூப்புக்கு நடிக்க வந்த புதிதில் தமிழ் அறவே தெரியாதாம். மெல்ல மெல்ல கற்றுத் தேர்ந்துள்ளார்.
இவர் நடித்த படத்தில் பணியாற்றிய வயதான தொழிலாளி ஒருவர்தான் தப்பாக இருந்தாலும் தமிழில் பேச முயற்சி செய்யுமாறு அறிவுரை கூறியுள்ளார். அதை ஏற்று முயற்சி செய்ததால், தமிழில் இப்போது ஓரளவு சரளமாகப் பேச வருகிறதாம்.
“ஒரு மொழியைத் தொடர்ந்து பேசினால்தான் அதைக் கற்றுக்கொள்ள முடியும். படிப்படியாக தவறுகளின் எண்ணிக்கை குறையும்போது அம்மொழி வசப்படும் என்று அந்த முதியவர் கூறியது அனுபவ உண்மை என்பது இப்போது புரிகிறது.
“அவரது அறிவுரையை பின்பற்றி யதன் பலனாக இன்று ‘கிளாப்’ படத்தில் எனது பாத்திரத்துக்கு நானே தமிழில் பின்னணி பேசியுள்ளேன். அந்த முதியவர் எங்குள்ளார் என்பது தெரியாது. எனினும் அவருக்கு என் நன்றி,” என்கிறார் கிரிஷா குரூப்.
தற்போது விதார்த்துடன் இணையத்தொடர் ஒன்றில் நடித்து வருபவர், சினிமாவில் வெற்றி, தோல்வி என்பது இயல்புதான் என்றும் தன்னம்பிக்கையுடன் நடைபோட்டால் வெற்றிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறுகிறார். இதுவே இளையர்களுக்குத் தமது அறிவுரை என்கிறார் கிரிஷா குரூப்.

