‘மதுவால் வாழ்க்கையை இழந்தேன்’
நடிகை மனிஷா கொய்ராலா மன உளைச்சல் காரணமாக மது அருந்தி, தன் வாழ்க்கையை இழந்ததாகக் கூறியுள்ளார்.
இவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் ‘பம்பாய்’, கமல்ஹாசனின் ‘இந்தியன்’, அர்ஜுனின் ‘முதல்வன்’, ரஜினியின் ‘பாபா’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.
மனிஷா கொய்ராலா 2010ஆம் ஆண்டு சாம்ராட் தேகல் என்பவரை மணந்து 2 வருடத்தில் விவாகரத்து செய்தார்.
“நான் விவாகரத்து பெற்றதும் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டேன். மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன்.
“அதனால் மதுப்பழக்கத்துக்கு அடிமையானேன். அதன் பிறகு வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. மதுப்பழக்கம் காரணமாக எனது மதிப்பு மிக்க வாழ்க்கையை இழந்தேன்.
“மது அருந்துவது பிரச்சினைக்கு தீர்வு ஆகாது. மது எந்த பிரச்சினையில் இருந்தும் நம்மை வெளியேற்றாது. மேலும் பிரச்சினைகளில் மூழ்கடிக்கவே செய்யும். இதனை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்,’’ என்று கூறினார்.
‘இயக்குநர்கள் காதலிக்க விடவில்லை’
பாலாஜி கே.குமார் இயக்கியுள்ள படம், ‘கொலை’. இப்படம் இன்று திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா நடித்துள்ளனர்.
சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். படம் குறித்து விஜய் ஆண்டனி பேசியபோது, “கதை சொல்லும்போது, படத்தில் 2 கதாநாயகிகள் என்று இயக்குநர் கூறினார்.
“மீனாட்சி சவுத்ரி இன்னொருவருக்கு ஜோடி. ரித்திகா சிங் எனக்கு தங்கை மாதிரி. படத்தில், எனக்கு மனைவி இருக்கிறார் என்றும் அந்த கதாபாத்திரம் எப்போதும் என் மீது கோபத்தில் எரிந்து விழும் என்று கூறினார்.
“இப்படி ஒவ்வொரு படத்திலும் என்னை காதல் செய்யவிடாமல் சில இயக்குநர்கள் தடுத்துவிடுகின்றனர். நான் நடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு இருப்பதால் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு இடைவெளி விட்டுள்ளேன்.
“எனது ‘கொலை’ படத்துக்கான விளம்பர நிகழ்ச்சியில் ஆர்யா கலந்துகொண்டு என்னையும் படக்குழுவினரையும் நெகிழவைத்து விட்டார். அவருக்கு மிக்க நன்றி,” என்று கூறினார்.

