இந்துஜா: நான் மிகவும் பேராசை பிடித்த நடிகை

இந்துஜா: நான் மிகவும் பேராசை பிடித்த நடிகை

3 mins read
cabf93de-2abe-4821-80b9-6a028e283e3e
இந்துஜா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

கதாநாயகியாக நடித்த பின்னர் குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு பலரும் தயங்குவர். ஆனால், நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் இதற்கு நேர்மாறாக உள்ளார்.

நாயகனின் தங்கை, குணச்சித்திர வேடம், கதாநாயகி என்று எதற்கும் தாம் தயார் என்கிறார் இந்துஜா.

“எல்லா நடிகைகளும் சொல்வதைத்தான் நானும் சொல்லப் போகிறேன். ஒரு கதையைக் கேட்கும்போது அதில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் ஆவலும் ஏற்பட வேண்டும். அதன் பிறகு, அதில் நமக்கான கதாபாத்திரம் எப்படி உள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.

“இன்று வரை இந்த அடிப்படையில்தான் எனக்கான படங்களைத் தேர்வு செய்து வருகிறேன். வெற்றி, தோல்விகளை மீறி இந்த அணுகுமுறை எனக்கு வசதியாக உள்ளது,” என்று அனுபவ நடிகையைப் போல் பேசுகிறார் இந்துஜா.

தற்போது இவரது நடிப்பில் உள்ள படம் ‘பார்க்கிங்’. சென்னையில் போதுமான வாகனம் நிறுத்தும் இடங்கள் இல்லாதது, வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டுப்பாடுகள், அதனால் மனித உறவுகளுக்குள் ஏற்படக்கூடிய சிக்கல்கள் ஆகியவற்றை அலசும் வகையில் இந்தப் படம் உருவாகிறது.

“இதுவரை யாரும் சிந்தித்துப் பார்க்காத கதைக்களம் இது. கதையைக் கேட்ட உடனேயே பிடித்துப்போனது. எனினும், பட வெளியீடு வரை என்னால் மேற்கொண்டு எந்தத் தகவலையும் தெரிவிக்க இயலாது.

“இதுவரை நடித்திராத மாறுபட்ட கதாபாத்திரம் அமைந்துள்ளது. பொதுவாக தென்னிந்திய நடிகைகள் நடிக்கக்கூடிய வழக்கமான கதாபாத்திரம் அல்ல.

“சராசரி பெண்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனுபவங்கள் இந்தப் படத்திலும் சித்திரிக்கப்பட்டுள்ளன. அதனால் இயல்பாகவும் மிகுந்த ஈடுபாட்டுடனும் நடிக்க முடிந்தது,” என்கிறார் இந்துஜா.

‘மேயாத மான்’ படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த பிறகு, அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிப்பது சிரமமாக இருந்தது என்று குறிப்பிடுபவர், இரு கதாபாத்திரங்களுக்கும் ஏற்ப தாம் நடித்தது பாராட்டுகளைப் பெற்றுத் தந்ததாகச் சொல்கிறார்.

“ஒரு நடிகை முந்தைய படங்களில் எவ்வாறு நடித்திருக்கிறார் என்பதைப் பார்த்த பின்னர் அவரை புதிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்வது ஒரு படைப்பாளிக்கு சிரமமான விஷயம். இவரால் நாம் எதிர்பார்த்தபடி நடிக்க முடியுமா என்று சந்தேகம் எழக்கூடும்.

“எனினும், சமூக ஊடகங்களின் தாக்கத்தால் படைப்பாளிகளின் வேலை சற்று எளிமையாகி உள்ளதாகத் தோன்றுகிறது. சமூக ஊடகங்களின் மூலம் நம்மைப் பற்றி யார், என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. ‘இவர் இப்படிப்பட்டவர்தான்’ என்று முத்திரை குத்திவிட முடியாது.

“சமூக ஊடகங்களில் நமது கருத்துகளையும் புகைப்படங்களையும் வெளியிடும்போது நமது உண்மையான முகம் தெரிய வரும். அந்த வகையில் சமூக ஊடகங்கள் வாயிலாக எனக்கான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன,” என்கிறார் இந்துஜா.

இத்தனைக்கும் இவர் சமூக ஊடகங்களில் அதிக நேரம் வலம் வருவதில்லை. முன்னணி நாயகி என்று பெயர் எடுப்பதைவிட, நல்ல நடிகை என ரசிகர்களால் பாராட்டப்படுவதையே விரும்புகிறாராம்.

“என்னைப் பொறுத்தவரை நடிகைகள் பேராசை பிடித்தவர்கள். நானும் அப்படித்தான். அனைத்து சவாலான பாத்திரங்களிலும் நடிக்க விரும்புகிறேன். குறிப்பிட்ட எல்லைக்குள் சிக்க விரும்பவில்லை. அதனால்தான் தோழி, தங்கை, நாயகி என அனைத்துவிதமான பாத்திரங்களையும் ஏற்க விரும்புகிறேன்.

“நடிக்க வருவதற்கு முன்பு, வாழ்க்கையில் எப்படிப்பட்ட பெண்ணாக உருவெடுக்க வேண்டும் என்பது குறித்து பலவிதமாக யோசித்திருக்கிறேன். இப்போது நடிகையாகிவிட்டேன்.

“திரையில் பலவிதமாக தோற்றமளிக்க சுதந்திரம் உள்ளது. இதே போன்ற அருமையான அனுபவம், உணர்வு இருக்க முடியாது. ஏன் அதிக படங்களில் நடிப்பதில்லை என்று கேட்கிறார்கள். எனக்குத் தெரிந்த சிலர் காலையில் மென்மையான கதாபாத்திரத்திலும் மாலையில் மூர்க்கமான வேடத்திலும் நடிப்பதைப் பார்த்திருக்கிறேன்.

“ஒரே நாளில் இரண்டு, மூன்று படங்களில் நடிக்க வேண்டிய அவசியமோ, அவசரமோ எனக்கு இல்லை. எதையும் நிதானப் போக்கில்தான் அணுகுவேன். எதையும் நேர்த்தியாகச் செய்ய விரும்புகிறேன்,” என்று பக்குவமாகப் பேசுகிறார் இந்துஜா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்