முதல் முறையாகப் பேய் படத்தில் நடித்த அனுபவம் திகிலாக இருந்ததாக நடிகை சுரபி தெரிவித்துள்ளார்.
‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் கதாபாத்திரத்தில் தோன்றுவாராம்.
“பேய்களை மையப்படுத்தி உருவாகும் படத்தில் நடிக்க நானும் ஆசைப்பட்டேன்.
“ஆனால், படப்பிடிப்புக்குச் சென்ற முதல் நாளன்று பேய் வீடு போன்ற அரங்கத்தைக் கண்டதும் அரண்டுவிட்டேன்.
“சுவரில் ஒட்டடை, சிலந்தி வலை, அரைகுறை இருட்டு, பழங்காலப் பொருள்கள் என்று அசல் பேய் வீடு போன்ற தோற்றத்துடன் அந்த அரங்கை அமைந்திருந்தார் கலை இயக்குநர்.
“முதல் நாளன்று குழந்தை நட்சத்திரம் மானஸ்வியுடன் சில காட்சிகளில் நடித்தேன். நிஜத்தில் மிக அழகான குழந்தையாகத்தான் மானஸ்வியைப் பார்த்திருக்கிறேன்.
“இந்தப் படத்தில் அக்குழந்தைக்கு பேய் கதாபாத்திரம் அமைந்துள்ளது. எனக்கு அந்த விவரம் தெரியாது. முதல் காட்சியை எடுத்தபோது பற்களைத் துருத்திக்கொண்டு, கண்களில் மை பூசி, வெள்ளி நிற உடையில், கலைந்துபோன தலைமுடியுடன் திடீரென என் முன் வந்து நின்றார் மானஸ்வி.
“அந்தத் தோற்றத்தில் அவரைப் பார்த்து அச்சத்தில் உறைந்துபோனேன். பிறகு என்னையும் அறியாமல் வீல் எனக் கத்திவிட்டேன். சில நொடிகளுக்குப் பிறகே என் முன் நிற்பது மானஸ்வி என்பது தெரிந்தது,” என்று சொல்லும்போது சுரபியின் கண்களில் அச்சம் தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதேபோல் ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கியபோது சுரபிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாம். மூன்று நாள்கள் ஓய்வு எடுத்த பிறகே படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.
“அந்தக் காட்சியில் நானும் சந்தானமும் ஒரு கதவை நோக்கி வேகமாக ஓட வேண்டும் என்றனர். எங்களுக்கு எதிரே கேமரா வேகமாக முன்னோக்கி வரும்.
“கேமரா வரும் வேகத்தை கணக்கிட்டு இருவரும் ஓடினோம். எனினும், இருட்டில் எடுக்கப்பட்ட காட்சி என்பதால் எதிரே என்ன இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
“சந்தானம் சரியாக ஓடி வர, நான் ஓரிரு வினாடிகள் தாமதித்துவிட்டேன். அதன் விளைவாக எதிரே இருந்த கேமரா என் நெற்றி மீது வேகமாக மோதியது. அவ்வளவுதான், வலியில் அலறித்துடித்தபடி கீழே விழுந்தேன்,” என்கிறார் சுரபி.
நெற்றியில் ஏற்பட்ட காயத்தால் மயக்கமாக உணர்ந்தாராம். சந்தானம் உடனடியாக தனது மருத்துவரை வர வழைத்து முதலுதவி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதன் பின்னர் மூன்று நாள்களுக்கு லேசான மயக்கம் இருந்ததாம்.
“நல்ல வேளையாக, மூன்று நாள்களில் தேறிவிட்டேன். இந்தப் படத்துக்காக முதன்முறையாக கொழும்பு நகருக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
“அப்போது அங்கு வெப்பம் அதிகமாக இருந்ததால் அனைவரும் களைப்பாகிவிட்டோம். நான் போட்டிருந்த ஒப்பனை கலைந்துவிட்டது. எங்களைவிட நடனக்குழுவைச் சேர்ந்தவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
“எனினும், மாலையில் நல்ல மழை பெய்தது. எப்படியோ வெயில், மழைக்கு மத்தியில் பாடல் காட்சியைத் திட்டமிட்டபடி படமாக்கிவிட்டோம்.
“இந்தப் படத்தில் இந்தி நடிகர் பிரதீப் ரவத் வில்லனாக நடிக்கிறார். அவரது உயரமும் மிரளவைக்கும் கண்களும் என்னை வெகுவாகப் பயமுறுத்திவிட்டன.
“போதாத குறைக்கு, தடிமனான கண்ணாடி அணிந்து பேய் கதாபாத்திரத்துக்கான ஒப்பனையுடன் அவர் படப்பிடிப்புத் தளத்தில் வலம் வந்ததைக் கண்டு அரண்டுபோனேன்.
“இப்படி ஏதோ பேய்களின் கூட்டத்துக்கு மத்தியில் நான் வாழ்ந்து கொண்டிருப்பதாக நினைக்கத் தோன்றியது. ஒரு வாரத்துக்குப் பிறகே இயல்பு நிலைக்குத் திரும்பினேன்.
“அந்த திகில் அனுபவத்தை இப்போது நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது,” என்று சொல்லி சிரிக்கிறார் சுரபி.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு சண்டைக் காட்சியை சென்னையில் உள்ள நூலகம் ஒன்றில் படமாக்கி உள்ளனர். சுரபியும் எதிரிகளைத் தாக்குவது போன்று அக்காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளதாம்.
இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் கிடைத்த அனுபவங்களை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது என்கிறார் சுரபி.

