தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாக்‌ஷி: வெற்றிகள் காத்திருப்பதாக நம்புகிறேன்

3 mins read
6f0cbab7-6b1b-4f64-bfe0-7c91aa5a7d40
சாக்‌ஷி அகர்வால். - படம்: ஊடகம்

கவர்ச்சியாக நடிப்பதில் எந்தவிதத் தவறும் இல்லை என்கிறார் சாக்‌ஷி அகர்வால்.

மனதை இளமையாக வைத்திருந்தால் ஒருவரது தோற்றமும் இளமையாக இருக்கும் என்று பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“என் குடும்பத்தில் இருந்து யாருமே திரைத்துறைக்கு வந்ததில்லை. நான்தான் நடிக்க வந்த முதல் ஆள் எனலாம். இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை மீறி செயல்பட நேர்ந்தது. எனது ஒழுக்கம் மீது என் பெற்றோர் வைத்த நம்பிக்கைதான் எனக்குப் பக்கபலமாக இருந்தது என்பேன். அதற்காக அவர்களுக்கு காலம் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்,” என்கிறார் சாக்‌ஷி.

தற்போது ‘ரிங்... ரிங்...’ என்ற படத்தில் நடித்து வரும் இவர், ‘கெஸ்ட்-2’, ‘தி நைட்’, ‘புரவி’, ‘120 ஹவர்ஸ்’, ‘குறுக்கு வழி’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என வரிசையாக பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.

“எனது இளமை ரகசியம் என்னவென்று பலரும் கேட்கிறார்கள். ரசிகர்களை சந்திக்கும்போது இந்தக் கேள்விதான் அதிகம் கேட்கப்படுகிறது.

“நிறைய உடற்பயிறி்சி செய்வது, தியானம் மேற்கொள்வது எனப் பொழுதைக் கழிக்கிறேன். நாள்தோறும் உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்வதுதான் எனது முக்கியமான பொழுதுபோக்கு. நேரம் கிடைக்கும்போது புத்தகங்கள் படிப்பேன். கடைத்தெருவுக்குச் சென்று வீட்டுக்கும் எனக்கும் தேவையான பொருள்களை வாங்குவது, சமைப்பது என ஏதாவது வேலையில் ஈடுபட்ட வண்ணம் இருப்பேன். இதுதான் எனது இளமைத் தோற்றத்துக்குக் காரணம் என்பேன்,” என்கிறார் சாக்‌ஷி.

ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு பொழுதை கழிப்பது தமக்குப் பிடிக்காது என்பவர், ஓடிக்கொண்டே இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் என்று அறிவுறுத்துகிறார்.

பொறியியல் படிப்பில் தங்கப் பதக்கத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளார் சாக்‌ஷி. எனினும் திடீரென மாடலிங் துறையைத் தேர்வு செய்தாராம்.

தொடர்புடைய செய்திகள்

அதன் பிறகு விளம்பரங்களில்் நடிக்கும் வாய்ப்புகளும் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளும் அமைந்தன என்றும் திரைத்துறையில் இருப்பதே எனது முதன்மைத் தொழிலாகிவிட்டது என்றும் சொல்கிறார்.

“நடிக்க வருவதற்கு முன்பு நன்கு யோசித்தேன். அதன் பிறகே உறுதியாக முடிவெடுத்துச் செயல்பட்டேன்.

“அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆறு மாதங்கள் தங்கி நடிப்புக் கலை தொடர்பாக படித்தேன். அது இன்றுவரை கைகொடுக்கிறது. திரைத்துறையில் இன்னும் பெரிதாக ஏதும் சாதிக்கவில்லை என்று சிலர் என்னை விமர்சிக்கிறார்கள்.

“அதில் உண்மை இருப்பதாகக் கருதுகிறேன். அதேசமயம் என்னுடைய முயற்சிகள் தொடர்கின்றன. நான் நம்பிக்கையோடு செயல்படுகிறேன். எனவே எனக்கான வெற்றிகள் காத்திருப்பதாக நம்புகிறேன்,” என்று சொல்லும் சாக்‌ஷி, தனுஷுடன் இணைந்து நடிக்க விரும்புகிறாராம்.

“தனுஷ் பற்றி் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். நடிப்பில் எந்த அளவுக்கு திறமைசாலியாக உள்ளாரோ, அதேபோல் நிஜ வாழ்க்கையிலும் மிக நல்ல மனிதர்.

“அதேபோல எனக்கு மிகவும் பிடித்த நடிகை நயன்தாரா. மிக அழகான நடிகை. தமிழ் சினிமாவின் ஏஞ்சல் என்றே சொல்வேன். அவரைப் பார்க்கும் அனைவருக்கும் அவர் மீது காதல் ஏற்படும்.

“தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என எந்த மொழியிலும் நடிக்கத் தயார். நடிப்புதான் தொழில் என்று வந்துவிட்ட பிறகு மொழி பாகுபாடு என்பதற்கு இடமே இல்லை,” என்கிறார் சாக்‌ஷி.

அந்தந்த சூழலுக்கு ஏற்றால்போல் நடிப்பதுடன், நம்மைக் குறை சொல்லாத வகையில் கச்சிதமாக நடிப்பதும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள சாக்‌ஷி, தமக்கென கொள்கைகள் ஏதும் இல்லை என்கிறார்.

“எதற்காகவும் கொள்கை வகுத்துச் செயல்படுவது கிடையாது. நாம என்ன செய்ய வேண்டும் என்பது எல்லோரின் நெற்றியிலும் தலை எழுத்தாக எழுதப்பட்டிருக்கிறது. அதன்படிதான் எல்லாம் நடக்கும். நான் திரைத்துறையில் அறிமுகமானதும் அப்படித்தான்,” என்கிறார் சாக்‌ஷி.

குறிப்புச் சொற்கள்