தமிழ்த் திரைப்படங்களின் வளர்ச்சியில் முன்னணி நடிகர்களின் படங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதேபோல் வளரும் இளம் நடிகர்களின் படங்களும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
இன்றைய காலகட்டத்தில் உச்ச நடிகர்களின் படங்கள் வருடத்துக்கு ஒரு படம் என்ற ரீதியில்தான் வெளியாகிறது. அவர்களின் சம்பளமும் சிறிய தயாரிப்பாளர்கள் நெருங்க முடியாத அளவுக்கு உள்ளது.
இந்தச் சூழலில் குறைந்த செலவில் படம் எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர்களின் ஒரே விருப்பமாக வளரும் இளம் நடிகர்கள் இருந்து வருகின்றனர்.
அவ்வகையில், தமிழ்ச் சினிமாவின் துடிப்பை மேம்படுத்த, பார்த்த நடிகர்களையே மீண்டும் மீண்டும் பார்த்து ரசிகர்கள் சலிப்படையாமல் இருக்க சில இளம் நடிகர்களும் திரைத்துறையில் பெயர் பதிக்கத் தொடங்கி உள்ளனர்.
விக்ரம் மகன் என்பதாலேயே துருவ் விக்ரம் மீது புகழ் வெளிச்சம் தானாக விழ ஆரம்பித்தது. `ஆதித்ய வர்மா’, `மகான்’ படங்களில் நடித்தவர், மாரி செல்வராஜ் இயக்கும் படம், `டாடா’ கணேஷ் இயக்கும் படம் என பரபரப்பாக படங்களில் நடித்து வருகிறார்.
காந்தக் குரலால் அதிகம் அறியப்படுபவர் அர்ஜுன் தாஸ். `கைதி’, `விக்ரம்’ போன்ற வெற்றிப் படங்கள் இவருக்கு சினிமாவில் புதிய பாதையை வகுத்துக் கொடுத்தது. `அநீதி’யிலும் சிறப்பாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.
துணை வேடங்களில் நடித்து நாயகனாக உயர்ந்தவர் அஸ்வின். `என்ன சொல்லப் போகிறாய்’ படத்தில் நாயகனாக நடித்தார். பிரபு சாலமன் இயக்கிய `செம்பி’யில் நல்ல பெயர் கிடைத்தது. தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார்.
பல ஆண்டு போராட்டங்களுக்குப் பிறகு இப்போதுதான் கவனிக்கத்தக்க இடத்துக்கு வந்துள்ளார் ஹரிஷ் கல்யாண். `நூறுகோடி வானவில்’, `டீசல்’, `லப்பர் பந்து’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அறிமுகப் படமான `அட்டகத்தி’ வெற்றிபெற்றும் ஒரு சில காரணங்களால் தினேஷுக்கு வாய்ப்புகள் சூடுபிடிக்காமல் இருந்தது. `ஜே பேபி’, `தேரும் போரும்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சினிமா பின்னணி இல்லாமலேயே தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர் அசோக் செல்வன். இவருடைய `போர்தொழில்’ வெற்றிபெற்றதால் ரசிகர்கள் பார்வை இவர் பக்கம் திரும்பியுள்ளது. `சபா நாயகன்’, `புளூ ஸ்டார்’ படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
மலேசியத் தமிழரான முகேன், `வேலன்’ படத்தில் அறிமுகமானார். `மதில்மேல் காதல்’, `காதல் என்பது சாபமா’, `ஜின்’ உள்ளிட்ட படங்கள் இவரது வசம் உள்ளன.
அறிமுகப் படமான `தரமணி’யில் சிறப்பாக நடித்து கவனம் ஈர்த்தவர் வசந்த் ரவி. `ஜெயிலர்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். நாயகனாகவும் நான்கைந்து படங்களில் நடித்து வருகிறார்.
`நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தில் அறிமுகமானவர் கவின். `டாடா’ வெற்றிக்குப் பிறகு இவருக்கு ஏராளமான படங்கள் குவிந்துள்ளன.
`ஜெய்பீம்’ படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மணிகண்டன். அண்மையில் இவர் நடித்த `குட்நைட்’ வெற்றிபெற்றதால் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன.
`லவ் டுடே’ வெற்றிப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் பார்வையில் விழுந்துள்ளார். நிறைய படவாய்ப்புகள் குவிவதாக கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

