‘இயக்குநர் தோற்பதில்லை, கதைகள்தான் தோற்கும்’

3 mins read
fff4953b-dbed-4051-b874-5bb4796d2fa5
ரஜினி. - படம்: ஊடகம்

மது அருந்தினால் மொத்த குடும்பமும் பாதிக்கப்படும் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். எனவே மது அருந்துவோர் அப்பழக்கத்தை கைவிட வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்தப் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, ‘அண்ணாத்த’ படத்திற்கு பின்னர் தம்மிடம் பல இயக்குநர்கள் பல்வேறு கதைகளைக் கூறினர் என்றும் அவற்றுள் பெரும்பாலானவை ‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’ ஆகிய படங்களின் சாயலில் இருந்தது என்றும் நிறைய கதைகளை நிராகரிக்க வேண்டியிருந்தது என்றும் குறிப்பிட்டார்.

“கதைகளை நிராகரித்தது எனக்கு மனவேதனையை அளித்தது. ‘ஜெயிலர்’ அறிவிப்புக்கு பிறகுதான் ‘பீஸ்ட்’ வெளியானது. நிறைய பேர் என்னிடம் வந்து நெல்சனுக்குத்தான் படம் கொடுக்க வேண்டுமா? என யோசிக்கச் சொன்னார்கள்.

“ஆனால், எப்போதுமே இயக்குநர் என்பவர் தோற்பதில்லை. அவர் எடுக்கும் கதைதான் தோற்கிறது. ஒரு படத்திற்கு தயாரிப்பாளர் தந்தை என்றால் இயக்குநர் தாய்,” என்றார் ரஜினி.

ஒரு படத்தின் வெற்றிக்கு நல்ல கதை என்பது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்ட அவர், இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடனான அனுபவங்களைச் சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் விவரித்தார்.

‘கேஜிஎப்’, ‘காந்தாரா’ படங்களின் மூலம் கன்னட பட உலகம் வேறு பரிமாணத்திற்கு சென்று கொண்டிருப்பதாகவும் ‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘புஷ்பா’ படங்கள் மூலம் தெலுங்குத் திரையுலகமும் வேறு ஒரு பரிமாணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும் ரஜினி சுட்டிக்காட்டினார்.

தமிழ்த் திரையுலகத்தினர் தங்களுக்குள் போட்டி பொறாமை என்று எதுவும் இல்லாமல், நல்ல தமிழ் படங்களை அளித்து, அவற்றை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ரஜினி, அப்போதுதான் திரை உலகம் வளர்ச்சி காணும் என்றார்.

அதன் பின்னர் சில அரசியல் கருத்துகளை அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.

“குரைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை. ஒருவேளை எனக்கு மதுப்பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதைவிட எங்கோ உயரத்தில் இருப்பேன். குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக்கொண்ட சூனியம். ஒருவர் மது அருந்துவதால் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதனால் தயவு செய்து குடிக்காதீர்கள்.

“இந்தப் படத்தில் உள்ள ‘ஹூக்கும்’ பாடலில் இடம்பெற்றுள்ள ‘சூப்பர் ஸ்டார்’ என்பதை மட்டும் நீக்கச் சொன்னேன். அது எப்போதுமே தொல்லைதான்.

“கடந்த 1977ஆம் ஆண்டிலேயே இந்தப் பிரச்சினை ஆரம்பித்தது. ஒரு படத்தின் தலைப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ என்று போட்டார்கள். அதை நான் வேண்டாம் என்று சொன்னேன். காரணம் அப்போது கமலும் சிவாஜியும் பெரிய நாயகர்கள். அதனால் வேண்டாம் என்று சொன்னேன். உடனே நான் பயந்து விட்டதாகக் கூறினர். நல்லவர்களுக்கும் கடவுளுக்கும் மட்டுமே பயப்பட வேண்டும்,” என்றார் ரஜினி.

ரஜினி மட்டுமே தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தப் பட்டத்துக்கு வேறு சில நடிகர்கள் முயற்சி செய்வது குறித்து அவ்வப்போது ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.

இந்நிலையில், ரஜினி இப்பட்டம் குறித்து பேசி இருப்பது விவாதங்களைக் கிளப்பி உள்ளது.

சமூக ஊடகங்களில் ரஜினி ரசிகர்கள் அவர் மட்டுமே இந்தப் பட்டத்துக்குத் தகுதி வாய்ந்தவர் என மீண்டும் வலியுறுத்தி உள்ளனர். அதேசமயம் விஜய் ரசிகர்களும் விடுவதாக இல்லை. விஜய்தான் அந்தப் பட்டத்துக்கு தகுதி உள்ளவர் என குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்