பெண்ணியத்தை முன்னிறுத்தும் ‘பார்பி’

பெண்ணியத்தை முன்னிறுத்தும் ‘பார்பி’

4 mins read
832ebe63-2492-49a4-b187-f9cfddb8f62f
பார்பி திரைப்படக் காட்சி. - படம்: பெரித்தா ஹரியான்
multi-img1 of 3

பெரும்பாலான சிறுமிகளின் குழந்தைப் பருவத்தில் பிரபல ‘பார்பி’ பொம்மை ஒரு பெரிய அங்கமாக இருந்திருக்கும். பார்ப்பதற்கு மிக எழிலாகவும் கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் இருக்கும் இந்த பொம்மையானது அண்மையில் ஒரு திரைப்படமாக்கப்பட்டது.

சிங்கப்பூரில் சென்ற மாதம் 20ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியீடு கண்டு இந்நாள் வரை வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது இப்படம். 1959 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பார்பி பொம்மை அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் இடம்பெற்ற விளையாட்டு பொம்மைகளின் கண்காட்சியில் முதலில் உதயமானது.

பிரியமான விளையாட்டு பொம்மையாக கருதப்பட்ட பார்பி, 1990களில் உலகமெங்கும் அதிகம் விற்பனையான பொம்மையாக இருந்தது. ஒவ்வோர் காலகட்டத்துக்கும் தகுந்தாற்போல பார்பி பொம்மையின் அலங்காரமும் பரிணாமம் கண்டு வந்தது. எப்பவும் இளஞ்சிவப்பு நிறத்தில் மட்டுமே தோன்றும் இந்தப் பொம்மையின் உடைகளும் அலங்காரமும் விற்பனைப் பொருள்களாகவும் வலம் வந்தன.

பார்பி முத்திரைகொண்ட சிறுவர்களுக்கான உடைகள், ஒப்பனைப் பொருள்கள், கைப்பைகள், காலணிகள் போன்றவை இன்னமும் விற்கப்படுகின்றன. முதலில் பார்பிபோல வேடமிட்டு நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகையான கால் கடோட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேரச் சிக்கல்களால் அவருக்குப் பதிலாக இதற்குமுன் ‘சூசைட் ஸ்குவாட்’, ‘ஹார்லி குயின்- பேர்ட்ஸ் ஆஃப் பிரே’ போன்ற படங்களில் முன்னணி பாத்திரத்தில் நடித்த ஆஸ்திரேலிய நடிகை மார்கோட் ராபி பார்பி வேடத்துக்கு ஒப்புக்கொண்டார்.

பார்பி படத்தின் தயாரிப்பாளரான அவர் இதற்கு முன் இது போன்ற ஒரு கற்பனை வடிவ கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் கொண்டவர். அவருடன் பார்பி பொம்மையின் காதலனான ‘கென்’ கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் ரயன் கோஸ்லிங் இணைந்து நடித்துள்ளார். சிறுவர்களை மட்டும் ஈர்க்கும் ஒரு படமாக அனைவராலும் கருதப்பட்ட இப்படம் அனைத்து வயதினரையும் ஈர்த்துள்ளது.

திரைப்படத்தின் இயக்குநரும் இணை எழுத்தாளருமான கிரெட்டா ஜெர்விக் கோடைக்காலத்தில் ஒரு திகைப்பூட்டும் படத்தை வெளியிட்டுள்ளார் என்றுகூடச் சொல்லலாம். படம் முழுவதும் கண்களுக்கு விருந்தூட்டும் மகிழ்ச்சியான காட்சிகள் மட்டுமே பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன. படத்தை முதல்முறை பார்க்கும்போது பார்வையாளர்கள் படத்தின் கதையைப் பார்ப்பதா அல்லது படத்தில் இடம்பெற்ற காட்சிகளைக் காண்பதா என்று குழம்பிப் போகலாம்.

முக்கியமான பார்பி கதாபாத்திரம் மட்டுமன்றி, இதர பார்பி பொம்மைகளும் கதாபாத்திரங்கள் ஆக்கப்பட்டன. ஒவ்வோரு பார்பி கதாபாத்திரத்தின் ஆடை வடிவமைப்பு, சிகை அலங்காரம், ஒப்பனை ஆகியவை பார்பி பொம்மையைப் பார்ப்பதுபோல எதார்த்தமாக உள்ளன. பார்பி பொம்மைகள் வாழும் வீடுகள், விளையாட்டுப் பொருள் போலவே மிக அழகாக வண்ணமயமாக படத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளன.

மார்கோட் ராபி ஒரு பார்பி பொம்மைக்கு உயிரூட்டப்பட்டதுபோல காட்சியளித்தார். வேடிக்கையாக நகைத்துக்கொண்டு அவ்வப்போது உரத்த குரலில் சிரித்துக்கொண்டே புன்னகை பூத்த முகத்துடன் இருந்தது அவருடைய நடிப்பு. இதெல்லாம் தாண்டி பார்பி கதாபாத்திரம் தனது வாழ்வியல் வாதத்தில் சிக்கலைச் சந்திப்பதே கதையின் கரு. மனித உலகிற்குச் சென்று தன்னை அறிந்துகொள்வதே மார்கோட் ராபியின் பாத்திரம்.

பார்பிமேல் அளவுகடந்த அன்பையும் காதலையும் பொழியும் கென், பார்பியுடன் சேர்ந்து மனித உலகிற்குச் செல்வார். மனிதர்கள் வாழும் இடத்தில் காலெடுத்து வைக்கும் இவர்கள் இருவரும் சில நண்பர்களைச் சந்திப்பார்கள். இந்தப் படம் நிஜ வாழ்க்கையில் இளம்பெண்கள் சந்திக்கும் உடல் சார்ந்த களங்கத்தையும் விவரித்துக் காட்டியுள்ளது.

இரு கால் பாதங்கள் தரையில் படாமல் நடக்கும் தன்மை கொண்ட பார்பி திடீரென அவ்வாறு நடக்க இயலாமல் போகும்போது பார்பி தன் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாத சூழலுக்குத் தள்ளப்படும். அதேபோலத்தான், சில நேரங்களில் மனிதர்களும் உண்மையில் மாற்றங்கள் நிகழும்போது அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு ஆளாகிறோம்.

பெண்ணிய சின்னமாகவும் பார்பி இப்படத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது. பார்பி பொம்மைகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியபோது பல்வேறு விதமான பொம்மைகள் விற்கப்பட்டன. அதே பொம்மைகள் படத்தில் கதாபாத்திரங்களாகவும் அறிமுகப்படுத்தப்பட்டன.

மனித உலகிற்குச் சென்று மீண்டும் பார்பி வாழும் வீட்டுக்கு திரும்பிய கென்னுக்குத் தனது வாழ்வுமீது மாறுபட்ட கண்ணோட்டம் வரும். பார்பியைப் போலவே இளஞ்சிவப்பு ஆடைகளில் காணப்படும் கென் பின்னர் உண்மையாகவே ஓர் ஆண் எப்படி நடந்துகொள்வானோ அதே விதம்போல மாறிவிடுவான். அது அவனது நடத்தையிலும் புலப்படும்.

பார்பி பொம்மைகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய ‘மேட்டல்’ நிறுவனத்தின் துணை நிறுவனரும், தலைவருமான ரூத் ஹேண்ட்லெரின் மகளான பார்பரா ஹேண்ட்லெரின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. பார்பியைச் சந்திக்கும் அவர் பார்பிக்கு ஒரு துணையாக இருந்து அவளின் அடையாளத்தை வெளிக்கொணர உதவுவார்.

கதை இறுதியில் தான் ஒரு நிஜ வாழ்க்கை பெண்ணாக தொடர்புபடுத்திக்கொள்ளும் பார்பி, தனது பார்பி உலகிலிருந்து விடைபெற்று மனித உலகிற்குச் சென்றுவிடுவாள். உலகத்தில் நம் அடையாளத்தை கண்டறிந்து வாழ வேண்டும் என்பதைக் கதை முக்கியமாக வலியுறுத்துகிறது.

மனிதராக வாழ்வது கடினம்தான் என்பதை முன்னிலைப்படுத்திய இப்படம், மனிதர்கள் பார்பி பொம்மைகள்போல புகழப்பட்டவர்கள் அல்லர் என்பதுதான் உண்மை என்பதை எடுத்துக்காட்டுகிறது. பெண்கள் ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்து, சமூகம் அவர்களை மதிப்பிடுவதைத் தவிர்ப்பது அவசியம் என்றும் படம் அறிவுறுத்துகிறது.

குறிப்புச் சொற்கள்