தமிழ்ப் படங்களில் நடிக்க போதுமான வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் தெலுங்கில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்து வருவதாகச் சொல்கிறார் நந்திதா ஸ்வேதா.
‘ஹிதிம்பா’ என்ற தெலுங்குப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அது மட்டுமன்று, கவர்ச்சியாகவும் முத்தக் காட்சியிலும் நடிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறி வந்தவர், இந்தப் படத்துக்காக தனது கொள்கையைத் தளர்த்திக் கொண்டுள்ளார்.
“ஏற்கெனவே தமிழில் காவல்துறை அதிகாரியாக நடித்த அனுபவம் உண்டு. அதனால் உடல்மொழி எப்படி இருக்க வேண்டும் வசனங்களை எவ்வாறு பேச வேண்டும் என்பதை ஓரளவு அறிந்து வைத்துள்ளேன்.
“மேலும், இந்தக் கதாபாத்திரத்தில் நான் மிக எளிமையாகக் காட்சி அளிக்க வேண்டும் என்று இயக்குநர் கூறியிருந்தார்.
“பொதுவாக நான் கலகலப்பாகவும் கொஞ்சம் அதிகமாகவும் பேசுவேன். ஆனால் காவல்துறை அதிகாரி என்றால் இதற்குத் தடை போட்டுவிடுகிறார்கள். அது மட்டுமே சிரமமாக இருந்தது,” என்று சொல்லிச் சிரிக்கும் நந்திதா, இந்தப் புதுப்படத்தின் திரைக்கதையும் வசனங்களும் தம்மை வெகுவாகக் கவர்ந்தது என்கிறார்.
இளம்பெண்களைத் தேடிப்பிடித்து கொலை செய்யும் ஒரு ‘சைக்கோ’ கொலையாளியைத் தேடிப்பிடிக்கும் பொறுப்பு நந்திதாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவனைப் பிடிக்கப் படாதபாடு படுகிறார் நந்திதா.
“சிவப்பு நிற உடையணியும் இளம் பெண்களை மட்டுமே குறிவைத்து கொலை செய்கிறான் அந்த ஆடவன்.
“காவல்துறை பெண் அதிகாரியும்கூட அவனிடம் சிக்கிக் கொள்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
“ஒரே சமயத்தில் பல கொலைகளை விசாரிக்கிறேன் என்பதுதான் சுவாரசியமான அம்சம். காதல் வயப்படும் காட்சிகளும் உள்ளன.
“எப்போதுமே பணி நிமித்தம் விறைப்பாகக் காட்சியளிக்கும் எனது கதாபாத்திரம் காதல் என்று வரும்போது சற்றே மற்ற இளம்பெண்கள் போல் செயல்பட வேவண்டியிருக்கும்.
“இந்தக் காரணத்தால்தான் ஒரு முத்தக் காட்சி படத்தில் இடம்பெறுகிறது. கதைக்கு மிக அவசியம் என இயக்குநர் கூறியது எனக்ககும் ஏற்புடையதாக இருந்தது. அதனால்தான் முத்தக் காட்சியில் நடித்தேன்,” என விளக்கம் அளிக்கிறார் நந்திதா.
புதிய தெலுங்குப் படத்தில் சில சண்டைக் காட்சி களிலும் நடித்துள்ள இவர், அதற்காக சிறப்புப் பயிற்சி ஏதும் பெறவில்லை என்கிறார்.
“ஒரே அடியில் பத்து வில்லன்களை வீழ்த்துவது போன்ற காட்சிகள் ஏதும் இல்லை. காதல் காட்சி களைப் போலவே சண்டைக் காட்சிகளும் மிக இயல்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
“அதேபோல் காவல்துறையின் விசாரணை எப்படி இருக்கும், காவல்துறை அதிகாரிகள் எத்தகைய சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை இந்தப் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இது தொடர்பான காட்சிகள் விறுவிறுப்பாகவும் பதற்றம் ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும்.
“தமிழிலும் தெலுங்கிலும் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க விரும்புகிறேன். இரு மொழிகளிலும் அறிமுகமான புதிதில் எத்தகைய உற்சாக உணர்வு மனதில் நிறைந்திருந்ததோ, அதேபோன்றுதான் இப்போதும் உணர்கிறேன்.
“இரு மொழி ரசிகர்களும் எனக்கு ஆதரவு அளிக்கிறார்கள். இயக்குநர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையும் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று சொல்லும் நந்திதா ஸ்வேதா, கைவசம் ஐந்து படங்களை வைத்துள்ளார்.
இவரது நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் மாங்கல்ய வரம். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியீடு காண உள்ளது.
“மாறுபட்ட கதைக்களங் களுக்கு ரசிகர்கள் நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள். இதற்கு ஏராளமான படங்களை உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம். இந்தப் படமும் ஒருவகையில் சோதனை முயற்சிதான்.
“படப்பிடிப்பின்போது சில சுவாரசியமான அனுபவங்கள் கிடைத்தன. ஆனால் கதை, காட்சி அமைப்பு மிகவும் பிடித்திருந்தது. எனவே நிச்சயம் வெற்றிபெறும் என நம்புகிறேன். எனக்குப் பிடித்த அம்சங்கள் ரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.
“பட வெளியீட்டை ஆவலுலடன் எதிர்நோக்கி உள்ளேன்,” என்கிறார் நந்திதா ஸ்வேதா.

