தொழில் அதிபராக வலம் வரும் நடிகை டாப்சி பன்னு, மணம் புரிந்துகொள்ள விரும்பும் பலருக்கும் தனது திருமண நிறுவனத்தின் மூலம் திருமணம் செய்து வைத்து வருகிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2011ல் வெளிவந்த ‘ஆடுகளம்’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் டாப்சி. அதன்பிறகு தெலுங்குப் பட உலகம் பக்கம் சென்ற அவர், தற்போது பாலிவுட் படங்களில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
ஆகஸ்ட் 1ஆம் தேதி பிறந்த டாப்சி செவ்வாய்க்கிழமையன்று பிறந்தநாளைக் கொண்டாடினார். 36 வயதாகும் அவருக்குப் பலரும் சமூக ஊடகங்கள்வழி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி குடியேறி உள்ளார் டாப்சி. 30 வயதுக்குள் வீடு, போதுமான அளவில் வங்கியில் வைப்புநிதி வைத்திருக்க வேண்டும் என்பது இவரது ஆசை. அந்த ஆசை ஒருவழியாக நிறைவேறிவிட்டதாக இவர் கூறுகிறார்.
பாலிவுட்டில் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வரும் இவர், சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை மற்ற தொழில்களிலும் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறார்.
புதிதாக இப்போது, தன் தங்கை ஷகுனுடன் சேர்ந்து திருமண ஏற்பாடுகளைச் செய்துகொடுக்கும் நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார். டாப்சி நடத்தி வரும் நிறுவனத்திடம் பணத்தைக் கொடுத்தால் போதும். அவர்களே திருமண வேலைகள் அத்தனையையும் பார்த்துக்கொள்வார்கள்.
திருமண ஏற்பாடுகள் எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்று கவலைப்படாமல் மணமக்கள் நிம்மதியாக, மகிழ்ச்சியுடன் இருக்கலாம். திருமண மண்டபம், அலங்காரம் முதல் மணமக்களின் ஆடை, மாலை, சாப்பாடு வரை அத்தனைக்கும் நாங்கள் பொறுப்பு. திருமணத்துக்கு வரும் விருந்தினர்கள் எந்தவித குறையும் கூறாத வகையில் நல்லவிதமாக திருமணம் நடந்தேறும் என்று டாப்சியின் நிறுவனம் உத்தரவாதம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார். ‘புனே 7 ஏசஸ்’ எனும் பூப்பந்து அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார் டாப்சி. அந்த அணியின் பயிற்றுநர்தான் டாப்சியின் காதலர் மத்தியாஸ் போ.
தொடர்புடைய செய்திகள்
கணினிப் பொறியாளரான டாப்சி, கல்லூரியில் படிக்கும்போது மாடலிங் செய்தார். படித்து முடித்து வேலை பார்த்தபோது பட வாய்ப்புகள் வரவே, பொறியாளர் வேலைக்கு விடைகொடுத்துவிட்டு, திரைத்துறையில் நாட்டம் காட்டத் தொடங்கினார்.
முன்னதாக, தெலுங்குத் திரையுலகில் வேலை பார்த்தபோது டாப்சியை ராசியில்லாத நடிகை என்றார்கள். அதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறுகையில், “நான் நடித்த தெலுங்குப் படங்களில் இரு படங்கள் சரியாக ஓடவில்லை என்பதால் நான் ராசியில்லாதவள் என பலரும் சொன்னார்கள். நடிக்க வந்த புதிதில் எனக்கு எதுவும் தெரியாது.
“கண்ணை மூடிக்கொண்டு படங்களைத் தேர்வு செய்து நடித்தேன். ஆனால், அவை எனக்குப் பொருந்தாமல் போய்விட்டன. நான் சினிமா பின்னணி இல்லாமல் வந்தவள். அதனால் என் தவறுகளில் இருந்து இப்போது பாடம் கற்றுக்கொண்டுள்ளேன்.
“மூன்று பாடல்கள் அல்லது ஐந்து காட்சிகளில் நடித்ததற்காக படம் ஓடாதபோது என்னைக் குறை சொன்னதுதான் ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நெடுநாள்கள்வரை யோசித்திருக்கிறேன்.
“இனி இதுபோல் குறைகளுக்கு நாம் ஆளாகக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதன்பின்னர் படத்தைத் தேர்வு செய்து நடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தினேன் என்றார்.
பாலிவுட்டில் பரபரப்பாக நடித்து வரும் டாப்சியின் நடிப்பில் மட்டும் கடந்த ஆண்டு ஆறு படங்கள் வெளியீடு கண்டன.
‘டுங்கி’ படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் வெளியீடாக உள்ளது. இது தவிர தன் கைவசம் மூன்று இந்திப் படங்களையும் அவர் வைத்திருக்கிறார்.