நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் இம்மாதம் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் முன்னோட்டக் காட்சி புதன்கிழமை இரவு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், ‘பாட்ஷா’ பாணியில் தொடக்கத்தில் மாணிக்கமாக வீட்டில் பணிவிடை செய்துகொண்டு சாதுவாக இருக்கிறார் ரஜினி. ஒரு கட்டத்தில் சம்பவத்தில் இறங்கும் அவர் மாணிக்கத்திலிருந்து ‘பாட்ஷா’வாக உருமாறுகிறார்.
காவலராக இருக்கும் வசந்த் ரவியின் தந்தையாக குடும்பத்தைக் காக்கும் பொறுப்பை சுமக்கிறார் எனத் தோன்றுகிறது.
‘ஓரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது. வீச்சுதான்’ என்ற வசனம் பெரும்பாலான ரசிகர்களின் கைதட்டல்களைப் பெறும். “மும்பையில நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க” என்பதற்கேற்ப சில பழைய நினைவுகளின் காட்சிகளும் வந்து செல்கின்றன.
நெல்சனின் வழக்கமான பயந்தகுணம் கொண்ட பாத்திரத்தை இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் செய்திருக்கிறார்.
‘ஜெயிலர்’ திரைப்படத்திற்கான அதிகாலைக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தகவல்கள் வெளிவந்துள்ளதால், காலை 9 மணிக்குத் தான் முதல் காட்சி திரையிடப்படும் எனக் கூறப்படுகிறது.
பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஜனவரி மாதம் விஜய், அஜித் நடித்த படங்கள் வெளியான போது இரு தரப்பு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது.
அத்துடன் ‘துணிவு’ படக் கொண்டாட்டத்தின்போது அஜித் ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததை அடுத்து இனி எந்தப் படத்திற்கும் அதிகாலைக் காட்சிகள் திரையிடக் கூடாது என தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்ததால் ‘ஜெயிலர்’ அதிகாலை காட்சி திரையிடப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ‘ஜெயிலர்’ படத்தின் முன்பதிவு அமோகமாக இருப்பதாக அயல்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘ஜெயிலர்’ படத்தின் எதிரொலியால் கோலிவுட்டில் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருந்த பல படங்கள் தங்களின் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளன.
சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாவதால் ஜூலை மாதமே வெளியிடப்பட்டது.
விஷாலின் ‘மார்க் ஆண்டனி’, லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ என பல படங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த ‘ஜெயிலர்’ படத்தின் வெளியீட்டிற்கு முன்பும் பின்பும் மூன்று வாரங்களுக்கு எந்த படங்களும் வெளியாகவில்லை.
40 வயது மூத்தவரான ரஜினியுடன் நடிப்பதா?
‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெறும் ‘காவாலா’ பாடலுக்கு துள்ளல் ஆட்டம் போட்டுள்ளார் தமன்னா.
‘ஜெயிலர்’ பட விளம்பர நிகழ்வில் கலந்துகொண்ட தமன்னாவிடம் அவருக்கும், ரஜினிக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் பற்றி கேட்கப்பட்டது.
ரஜினிக்கு 72 வயதாகிறது, தமன்னாவுக்கு 33 வயதாகிறது. தெலுங்குப் படமான போலா ஷங்கர் படத்தில் 67 வயதாகும் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் தமன்னா.
தன்னை விட அதிக வயது நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பது குறித்து, வித்தியாசத்தை ஏன் பார்க்கிறீர்கள்?. திரையில் வரும் இரண்டு கதாபாத்திரங்களை மட்டும் பாருங்கள். 60 வயதிலும் அட்டகாசமாக ஸ்டண்ட்ஸ் செய்கிறார் டாம் க்ரூஸ். 60 வயதிலும் நானும் குத்தாட்டம் போட விரும்புகிறேன் எனக் கூறியிருக்கிறார் தமன்னா.
‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா சில காட்சிகள் தான் வருவார் என்றும், ரஜினிக்கு ஜோடி ரம்யா கிருஷ்ணன் என்றும் கூறப்படுகிறது. படையப்பா படத்தில் ரஜினியை அடையவேண்டும் என்ற ஆசை நீலாம்பரிக்கு இருக்கும், அது நிறைவேறாமல் போனது. அடுத்த ஜென்மத்தில் உன்னை அடைந்தே தீருவேன் என்று நீலாம்பரி கூறியிருப்பார். நடிகர்களுக்கு அடுத்த ஜென்மம் என்பது அடுத்த படமே... ’ஜெயிலர்’ படத்தில் நீலாம்பரியின் ஆசை நிறைவேறியதா...? ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரசிகர்களின் கேள்விக்கு பதில் கிடைத்து விடும்.