இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ்

2 mins read
9b35ea59-3dec-4444-8f88-43d1b8d975ca
இளையராஜாவுடன் தனுஷ். - படம்: ஊடகம்

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாக உருவாக்கப்படுகிறது. இதை இயக்குநர் ஆர்.பால்கி இயக்க இருப்பதாகவும், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

‘பா’, ‘ஷமிதாப்’, ‘பேட்மேன்’ உள்ளிட்ட படங்களை இந்தியில் இயக்கி உள்ள பால்கி, இளையராஜாவின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்பது நீண்டநாள் கனவு என ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா நல்ல பாடகரும் ஆவார். பல படங்களில் இவர் எழுதிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் பாடலாசிரியராகவும் அவர் முத்திரை பதித்துள்ளார்.

“இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பதை பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன். இந்தப் படத்தில் நடிக்க வைப்பதுதான் தனுஷுக்கு நான் கொடுக்கும் ஆகச்சிறந்த பரிசு.

“காரணம் என்னைப்போலவே தனுசும் இளையராஜாவின் தீவிர ரசிகர்’‘ என்கிறார் இயக்குநர் பால்கி.

தாம் இளையராஜாவின் தீவிர ரசிகர் என்று தனுஷ் பலமுறை தெரிவித்துள்ளார். இளையராஜாவின் பாடல்களைக் கேட்கும்போது மனதில் தனி உற்சாகம் பிறக்கும் என்றும் பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜாவின் சிறப்பு இசை நிகழ்ச்சிகளுக்கும் அவர் நேரில் செல்வது வழக்கம்.

இந்நிலையில், வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தனது கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பதற்கு இளையராஜா சம்மதம் தெரிவித்துள்ளாரா என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.

எனினும் அவரது அனுமதியின்றி இயக்குநர் பால்கி, இந்தத் தகவலை வெளியிட வாய்ப்பு இல்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

இந்நிலையில், பால்கியின் இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்த கூடுதல் தகவல்களுக்காக அவர் காத்திருக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்