கடந்த 2003ஆம் ஆண்டு ஜோதிகாவுடன் தான் இணைந்து நடித்த ‘காக்க காக்க’ படம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார் சூர்யா.
சூர்யாவின் திரையுலகப் பயணத்தில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் ‘காக்க காக்க’. இதில் காவல்துறை அதிகாரியாக அவர் நடித்திருந்தார்.
இந்தப் படம் வெளியாகி இருபது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அது தொடர்பான நினைவுகளை பகிர்ந்துள்ளார் சூர்யா.
பட நாயகி ஜோதிகா உள்ளிட்ட படக்குழுவினருடன் தாம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள சூர்யா அதில், “இது எனக்கு அனைத்தையும் கொடுத்த திரைப்படம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
“இதில் நடித்த அன்புச் செல்வன் கதாபாத்திரம் எப்போதும் என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. ஜோதிகாதான் இந்த படம் குறித்து முதலில் என்னிடம் பேசினார். இயக்குநர் கௌதம்மேனன், சக நடிகர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு நன்றி. இந்தப் படம் தொடர்பாக நிறைய நல்ல நினைவுகள் உள்ளன,” என்றும் சூர்யா தெரிவித்துள்ளார்.
தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.