காதல் மீது நம்பிக்கை உள்ள போதிலும் தமக்கு அத்தகைய அனுபவம் ஏற்பட்டதில்லை என்கிறார் இளம் நாயகி துஷாரா விஜயன்.
எனினும் பள்ளி, கல்லூரி நாள்களில் பலர் இவரைக் காதலிப்பதாக நேரடியாகக் கூறியுள்ளதாகச் சொல்கிறார்.
“இன்றுவரை நான் யாரையும் காதலித்தது இல்லை. இதுவரை எந்த இளையரும் என் மனதில் காதல் உணர்வுகளை ஏற்படுத்தியதில்லை. இதுதான் உண்மை.
“காதல் குறித்து வெளிப்படையாகப் பேசுவதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. பல பேட்டிகளில் இதுகுறித்து குறிப்பிட்டுள்ளேன்,” என்று சொல்லும் துஷாரா, அடுத்து பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
அதில் காளிதாஸ், அமலாபால் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இது தவிர மேலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.
‘சார்பட்டா’ படத்தில் கிராமத்து கதாபாத்திரம், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் நகரத்து நாகரிகப் பெண் என அடுத்தடுத்த படங்களில் எவ்வாறு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க முடிகிறது என்று ரசிகர்கள் பலரும் தம்மிடம் கேட்பதாகக் கூறுகிறார் துஷாரா.
இதற்கு ‘சினிமா மீதான காதல்தான் காரணம்’ என்பதே இந்த இளம் நாயகி அளிக்கும் ஒற்றை வரி பதில். விரிவான விளக்கத்தையும் ஒருசேர அளிக்கிறார்.
“என்னைப் பொறுத்தவரை எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதை விரும்பி, ரசித்து, உணர்ந்து நடிக்கிறேன். அவ்வளவுதான். சினிமா மீது எனக்கு அளவு கடந்த காதல் உண்டு. அதன் தீவிரம் ஒவ்வொரு நாளும் கூடத்தான் செய்கிறது.
தொடர்புடைய செய்திகள்
“திரையுலகம் மீதான காதல்தான் என்னை முழுமையாக இயக்குகிறது. இந்தக் காதல்தான் பொறியியல் படிப்பைக்கூட பாதியில் கைவிடும் துணிச்சலைத் தந்தது.
“12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றதும் கணினி பொறியியல் படிப்பை மேற்கொண்டேன். எனினும் இது நானாக விருப்பப்பட்டு தேர்ந்தெடுத்த படிப்பு அல்ல. வீட்டில் கட்டாயப்படுத்தியதால் படித்தேன்.
“ஒரு கட்டத்தில் சினிமா ஆசையால் மாடலிங் துறையில் ஈடுபட்டேன். அதன் பிறகு எனக்கான பாதைகள் அடுத்தடுத்து தென்பட்டன. இதோ, ஒரு நடிகையாக மாறி, பேட்டி அளிக்கும் அளவுக்கு முன்னேறி வந்துள்ளேன்,” என்கிறார் துஷாரா.
கதாநாயகியாக மட்டுமே நடிக்க முடியும் அதிக காட்சிகளில் இடம்பெற வேண்டும் என்றெல்லாம் இவர் நிபந்தனைகள் விதிப்பதில்லை. மனதுக்குப் பிடித்திருந்தால் வில்லியாகவும் நடிக்கத் தயார் என்கிறார்.
“மூன்று மணி நேரம் திரையில் ஓடக்கூடிய ஒரு படத்தில் ஐந்து நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றினாலும், அந்தக் கதாபாத்திரத்தை ஏற்கத் தயார்.
“இதை மனதிற்கொண்டுதான் இன்றுவரை எனக்கான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து வருகிறேன்.
“என்னை பொறுத்தவரை சவாலான கதாபாத்திரங்களை விரும்பி ஏற்பேன். எந்த வேடமாக இருந்தாலும் அது என்னையும் ரசிகர்களையும் இணைப்பதாக இருக்க வேண்டும். நாயகி, வில்லி என எதுவாக இருந்தாலும் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே உரிய அங்கீகாரம் கிடைக்கும்,” என்று சொல்லும் துஷாரா, கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்கிறார்.
கவர்ச்சிக்கு என ஓர் எல்லை இருப்பதாகக் குறிப்பிடுபவர், அந்த எல்லை எதுவென்றும் தமக்குத் தெரியும் என்கிறார்.
தாம் குறிப்பிடும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் கவர்ச்சி வேடங்களுக்கும் இடமுண்டு என்று சுட்டிக்காட்டுபவர், விருதுகள் குறித்தெல்லாம் இப்போது யோசிக்கவில்லை என்கிறார். எனினும் பின்னாள்களில் விருதுகளை தாம் குறிவைக்கக்கூடும் என்கிறார் துஷாரா.
உங்கள் பெயரை உச்சரிக்கும்போது வித்தியாசமாக உள்ளதே?
“இது என் தாத்தா சூட்டிய பெயர். துஷாரா என்றால் ‘மலைகளின் பெண் தெய்வம்’ என்று அர்த்தமாம். இப்படிப்பட்ட அழகான, கவித்துவமான பெயரை சூட்டிய தாத்தாவுக்கு நன்றி,” என்கிறார் துஷாரா.


