ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்து நடித்து வரும் படத்தில் ராணுவ வீரர் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்க, காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில்தான் சிவா நடிப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையின்போது வீர மரணம் அடைந்தார் ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன்.
மரணத்தின் விளிம்பில் இருந்தபோதும் துணிச்சலாக எதிரிகளை நோக்கி முன்னேறிச் சென்று மூன்று தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தினார். தற்போது அவரது கதாபாத்திரத்தில்தான் சிவகார்த்திகேயன் நடித்து வருவதாகத் தகவல்.
சாய்பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்தின் கதை இணையத்தில் கசிந்துள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனால் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் படக்குழுவினரைத் தவிர, வேறு யாருக்கும் அனுமதி இல்லையாம்.

