தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார் ஃபரியா அப்துல்லா. விஜய் ஆண்டனி நாயகனாக வைத்து சுசீந்திரன் இயக்கியுள்ள ‘வள்ளிமயில்’ படத்தில் இவர்தான் கதாநாயகி.
முதல் படமே இன்னும் வெளியாகவில்லை. ஆனால் ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த இவரால் தமிழில் சரளமாகப் பேச முடிகிறது.
“என் தந்தை ஒரு மலையாளி. தனது தமிழ் நண்பர்களுடன் தமிழில்தான் உரையாடுவார். இயக்குநர் சுசீந்திரன் படப்பிடிப்பைத் தொடங்கும் முன்பே படக்குழுவில் உள்ள அனைவரும் தமிழில்தான் பேச வேண்டும் எனக் கண்டிப்பாகக் கூறிவிட்டார். என்னைப் போல் தமிழ் தெரியாதவர்களுக்கு பயிற்சி வகுப்புக்கும் ஏற்பாடு செய்தார்.
“அவ்வாறு அவர் உத்தரவு பிறப்பிக்காமல் இருந்திருந்தால் இந்த அளவுக்கு தமிழில் பேசமாட்டேன். இனி எனது கதாபாத்திரங்களுக்கான பின்னணிக் குரல் பதிவில் தயக்கமின்றிப் பங்கேற்க முடியும்,” என்கிறார் ஃபரியா அப்துல்லா.
கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான ‘ஜாதி ரத்னலு’ தெலுங்குப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கில் முன்னணி நாயகிகளில் ஒருவராக உருவெடுத்து வருகிறார். ‘தி ஜெங்காபுரு கர்ஸ்’ என்கிற இந்தி இணையத் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
“இன்று நடிகையாக உங்கள் முன்பு பேசுகிறேன் என்றால் அதற்கு என் பெற்றோர் அளித்த ஊக்கம்தான் காரணம். ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோதே, நல்ல இசையைக் கேட்டால் உடலை அசைப்பேன் என்று அப்பாவும் அம்மாவும் சொல்வார்கள்.
“ஐந்து வயதிலேயே என்னை நடன வகுப்புக்கு அனுப்பினார்கள். எனக்குப் பிடித்தமானவற்றை வாங்கித் தந்தனர். பிடித்தவற்றைக் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தனர். நடன வகுப்புகள், நடிப்புப் பயிற்சி, ஓவியப் பயிற்சி என சிறு வயதிலேயே பரபரப்பாக வலம் வந்தேன்,” என்று பெற்றோரின் அக்கறையை பகிரும்போது நெகிழ்ந்து போகிறார் ஃபரியா அப்துல்லா.
பள்ளி, கல்லூரி நாள்களிலேயே பல்வேறு நாடகக் குழுக்களில் இணைந்து பல நாடகங்களில் நடித்த அனுபவம் உண்டாம். ஆங்கில, இந்தி நாடகங்கள், ஷேக்ஸ்பியர் நாடகங்கள் ஆகியவற்றில் நடித்த அனுபவம்தான் திரையுலகில் பணியாற்றும் துணிச்சலையும் அனுபவத்தையும் தந்ததாகக் குறிப்பிடுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
தெருக்கூத்து நாடகங்களில் நடிக்கும் பெண்ணுடைய சிக்கலான வாழ்க்கையை விவரிக்கிறதாம் ‘வள்ளிமயில்’ படம். தனது நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்த இயக்குநர் சுசீந்திரன் வாய்ப்பு அளித்திருப்பதாகச் சொல்கிறார்.
“சுசீந்திரன் இதற்கு முன்பு இயக்கியுள்ள அனைத்து படங்களையும் பார்த்துவிட்டேன். எல்லாமே மாறுபட்ட கதைக்களங்கள், அழுத்தமான கதாபாத்திரங்கள், அருமையான வசனங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட படைப்புகள். அவரது இயக்கத்தில் அறிமுகமாகிறேன் என்பது உற்சாகம் அளிக்கிறது. மேலும், விஜய் ஆண்டனியுடன் நடிக்கிறேன் என்பது கூடுதல் வசதியாக உள்ளது. எந்தவிதமான பந்தாவும் இன்றி பழகக்கூடியவர் அவர். ஆக மொத்தத்தில் இதைவிட சிறப்பான அறிமுகப் படம் தமிழில் அமைந்துவிடாது. இந்தப் படம் வெற்றி பெறும் என்பதில் எனக்கு இருபது விழுக்காடு நம்பிக்கை உள்ளது,” என்கிறார் ஃபரியா அப்துல்லா.
முழுநீள நகைச்சுவைப் படம் ஒன்றில் நடிக்க விரும்புவதாகச் சொல்பவர், சோகமான, அழுகைக் காட்சிகளில் நடிப்பதுதான் மிகச் சிரமம் என்கிறார்.
“இந்தி இணையத் தொடருக்காக ஒடிசாவில் உள்ள சுரங்கப் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம். அங்குள்ள பழங்குடியினப் பெண்களின் வாழ்க்கைத் தரத்தைப் பார்த்தபோது அதிர்ந்து போனேன். அந்தப் பெண்களைப் பார்த்த பிறகுதான் நானெல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டவள் என நினைக்கத் தோன்றியது. அதிக வசதிகள் இல்லாத பகுதியில் படப்பிடிப்பு நடப்பதாக அறிந்தபோது தயக்கமாக இருந்தது. ஆனால் அந்தப் பெண்களைப் பார்த்தபோது, அவர்களை மையப்படுத்தி உருவாகும் படைப்பில் நடிக்க வேண்டும் சிரமங்களை ஏற்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அந்தப் பெண்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ விரும்புகிறேன்,” என்கிறார் ஃபரியா அப்துல்லா.

