சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ள கீர்த்தி சுரேஷ், திரைக்குப் பின்னால் கடினமாக உழைக்கும் கலைஞர்களுக்கு தனது திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் தங்க நாணயங்களைப் பரிசளித்து வருவதாகக் கூறியுள்ளார்.
ஒரு திரைப்படம் வெற்றிபெற்றால் அதில் நடித்த நடிகர், நடிகைகளைப் பாராட்டிப் புகழ்வது ரசிகர்களின் வழக்கம். ஏனெனில், திரைப்படங்களைப் பார்க்கும்போதே நடிகர்-நடிகைகள் சினிமாவிற்காக எவ்வளவு உழைத்துள்ளார்கள் என்பது புரிந்துவிடும்.
ஆனால், திரைப்படத்தின் வெற்றிக்காக திரைக்குப் பின்னால் இருந்து பாடுபடுபவர்களின் சிரமம் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. ஒரு படத்தின் வெற்றிக்கு அவர்களது உழைப்பும் முக்கிய காரணம். இந்தக் கடும் உழைப்புக்கு அடையாளமாகத் தான் நான் தங்க நாணயங்களை பரிசாக கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளேன் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.
தமிழ், தெலுங்கு, மலையாளப் பட உலகில் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் கீர்த்தி சுரேஷ், ‘மாமன்னன்’ படத்தைத் தொடர்ந்து ‘கண்ணிவெடி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் மறுபதிப்பாகும் ‘தெறி’ படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளாராம்.
நாயகன்களுடன் காதல் பாடல்களைப் பாடுவது, கதாநாயகியை முதன்மைப்படுத்தும் கதையில் தனித்து நடித்து பெயர் வாங்குவது என சகல வேடங்களிலும் கலக்கி வருகிறார்.
தனது திரையுலக அனுபவங்கள் குறித்து அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், அழகாக இருப்பதும் அழகாக இருப்பதுபோல் நம்மைக் காட்டிக் கொள்வதும் சிரமமான காரியம் அல்ல. எதார்த்தமான கதாபாத்திரங்களில் நடிப்பது மட்டும்தான் மிகவும் சிரமமான காரியம்.
எதார்த்தமாக தோன்றுவதற்காக மணிக்கணக்கில் அலங்காரம் செய்துகொள்ள வேண்டியது இருக்கும். இயற்கையாகவே நாம் அழகாக இருந்தாலும் காட்சிக்காக நமது அழகை மட்டுப் படுத்திக்கொள்ள வேண்டும். இதுதான் நடிகைகள் எதிர்நோக்கும் சவாலான விஷயங்கள் என்று தெரிவித்த அவர், சினிமாவில் மறக்கமுடியாத சம்பவம் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
சினிமாவுக்கு வந்த புதிதில் சில தோல்விப் படங்களில் நடித்து தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதால், ராசியில்லாத நடிகை என என்னைப் பலரும் கூறினார்கள். இந்தப் பெண்ணை வைத்து படம் எடுத்தால் சினிமா பாதியிலேயே நின்றுவிடும் என முத்திரை குத்திவிட்டார்கள். அதை கண்டுகொள்ளாமல் முன்னேறியதால் இன்று இந்த அளவுக்கு ஒரு முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளேன். என்னை நிராகரித்த அந்த நாள்களை மறக்கமுடியாது.
தொடர்புடைய செய்திகள்
“ஒரு வேளை நான் நடிகையாகாமல் இருந்திருந்தால் பேஷன் டிசைனர் ஆகியிருப்பேன்,” என்று சொல்லும் இவர், சென்னையில் ‘பேஷன் டிசைனிங்’ பயிற்சிப் பட்டறையில் பயின்றதாகவும் சொல்கிறார்.
பூஜைகள் செய்வதற்கு நேரம் இருக்காது. ஆனால் பிரார்த்தனை செய்வேன். வீட்டில் தினமும் விளக்கு எரிந்துகொண்டே இருக்கும். ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் மந்திரம் மென்மையான இனிய குரலில் ஒலித்துக்கொண்டே இருக்கும். அதைக் கேட்கும்போது நேர்மறை ஆற்றல் எனக்குள் பெருக்கெடுக்கும் என்கிறார்.
பருப்பு ரசம், ஆனியன் தோசை, ரொட்டி, பச்சடி உள்ளிட்டவை எனக்கு மிகவும் பிடிக்கும். சப்பாத்தியைச் சுருள் போல் உருட்டி அதனை வெட்டி நூடுல்ஸ் செய்வேன். இதெல்லாம் எனது பிரியமான உணவுகள்.
மன அழுத்தத்தை குறைத்துக் கொள்வதற்கு கார் ஓட்டுவேன். என் செல்லப்பிராணியான நைக்கி நாயுடன் விளையாடுவேன். ஒரு கப் காஃபி குடிப்பேன். சிறுவயது தோழியுடன் பேசுவேன். இதெல்லாம் என மன அழுத்தத்தை மாயமாக்கும் வழிகள்.
`சர்க்காரு வாரி பாட்டா’ தெலுங்குப் படத்தில் மகேஷ் பாபுவைத் திட்டுவதற்கு மிகவும் சிரமப்பட்டேன். நிறைய டேக்குகளை எடுத்தேன். அதேபோல தெளிவாக தெலுங்கு வசனங்களை பேசுவதற்கும் டப்பிங் செய்வதற்கும் சிரமப்பட்டு நடித்துள்ளேன் என்றார்.
ஷாருக்கானுடன் இணைந்து நடனமாட வேண்டும் என்ற ஆசையும் என்னுள் ஊஞ்சலாடிக் கொண்டே உள்ளது என்கிறார் கீர்த்தி சுரேஷ்.

