ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்க நுழைவுச்சீட்டு முன்பதிவில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர், அமெரிக்கா எனப் பல்வேறு நாடுகளில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தைப் பார்த்து முடித்த பின்னர் இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார் ரஜினிகாந்த்.
சிங்கப்பூர் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களுக்கான பட்டியலில் ‘ஜெயிலர்’ இடம்பெற்றுள்ளது என்றும் வட அமெரிக்க சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் முதல் ஐந்து தமிழ் திரைப்படங்களில் ‘ஜெயிலர்’ படமும் ஒன்று என்றும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் திங்கட்கிழமை வரை பிரீமியர் அட்வான்ஸ் விற்பனையில் சுமார் 664,000 டாலர் மதிப்புள்ள திரையரங்க நுழைவுச்சீட்டுகள் விற்பனையாகி உள்ளன.
இது விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்துக்கான முன்பதிவு வசூலைவிட அதிகமாகும். இதே போல் ‘கபாலி’, ‘2.0’ என தமது முந்தைய படங்களின் முதற்கட்ட வசூலையும் முறியடித்துள்ளார் ரஜினி.
பெங்களூரு நகரில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் ‘ஜெயிலர்’ படத்துக்கு அதிக காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் ‘ஜெயிலர்’ படம் முதல் நாளில் தோராயமாக ரூ.25 கோடி வரை வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உலகளவில் இப்படம் முதல் நாளில் ரூ.50 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
முன்பதிவு மூலமாக ‘ஜெயிலர்’ படம் இந்தியாவில் மட்டும் சுமார் 13 கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
இதேபோல் அமெரிக்காவில் ரூ.7 கோடி வசூல் கண்டுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றைத் தயாரிப்புத் தரப்பு உறுதி செய்யவில்லை என்றாலும், ஊடகங்களில் வெளிவரும் இத்தகைய தகவல்கள் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதற்கிடையே, இமயமலைக்குப் புறப்படும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, கொரோனா நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் கடந்த நான்கு ஆண்டுகளாக தம்மால் இமயமலைக்குச் செல்ல முடியவில்லை என்றார்.
‘ஜெயிலர்’ படம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, “முதலில் நீங்கள் அனைவரும் படத்தைப் பார்த்துவிட்டு கருத்து கூறுங்கள்,” என்றார் ரஜினி.
இமயமலையில் இருந்து தமிழகம் திரும்பிய கையோடு அவர் தனது அடுத்த படத்துக்கான பணிகளைத் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ‘ஜெயிலர்’ படத்தை திரையரங்கில் காண ஆவலுடன் காத்திருப்பதாக தமிழ்த் திரையுலகப் பிரமுகர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

