பெரும்பாலான கதாநாயகிகள் தங்களுடைய அழகு ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, உணவுக் கட்டுப்பாடு குறித்து தவறாமல் குறிப்பிடுவார்கள்.
உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும்தான் தங்கள் இளமை ரகசியம் என்று முன்னணி நாயகிகள் பேட்டிகளில் குறிப்பிடுவதை அறிவோம்.
இந்நிலையில், தமிழ் சினிமாவின் இன்றைய இளம் கதாநாயகிகளுக்குப் பிடித்தமான உணவு வகைகளை தமிழக ஊடகம் பட்டியலிட்டுள்ளது.
சாய் பல்லவி, அதிதி சங்கர், வாணி போஜன் உள்ளிட்ட பலர் தங்களுடைய உணவு ரகசியத்தைப் பகிர்ந்துள்ளனர்.
உணவு விஷயத்தில் அதிகம் யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை என்றும் தக்காளி சாதம், ரசம் சாதம் என்றால் ரொம்பப் பிடிக்கும் என்றும் சொல்கிறார் சாய் பல்லவி. எப்போதாவது பிரியாணியை ருசிப்பாராம்.
“ஒருநாளின் எந்தச் சமயத்திலும் எந்த பழங்களைக் கொடுத்தாலும் விரும்பிச் சாப்பிடுவேன். படப்பிடிப்பு இடைவேளையின்போதும் என் கையில் பழங்கள்தான் இருக்கும்.
“சாக்லேட் கேக் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதற்கு நான் அடிமை. அதேபோல் குழிப்பணியாரம் என்றால் கணக்கின்றி சாப்பிடுவேன். எனக்கு எப்போதும் வீட்டுச்சாப்பாடுதான் பிடிக்கும். உணவவகத்தில் இருந்து வரவழைக்கப்படும் உணவை தவிர்த்துவிடுவேன்.
“பழங்கள்தான் எனது கட்டுடலின், அழகின் ரகசியம்,” என்கிறார் சாய் பல்லவி.
தொடர்புடைய செய்திகள்
பிரியாணி ரசிகை அதிதி
இயக்குநர் சங்கரின் மகளும் வளர்ந்து வரும் நாயகியுமான அதிதி சங்கர் தனக்குப் பிரியாணிதான் ரொம்பப் பிடிக்கும் என்கிறார்.
“காலை பசியாறுவதில் தொடங்கி இரவு உணவு வகை பிரியாணியை மட்டுமே பரிமாறினாலும் கவலைப்படமாட்டேன். நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக பிரியாணி கொடுத்தாலும் ஆட்சேபனை இல்லை.
“வீட்டில் இருக்கும்போது நான் வைக்கும் ரசம் அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும். வெளியே சென்றால் இட்லி, கோழி மசாலா ஆகியவற்றை கேட்டு வாங்கிச் சாப்பிடுவேன். என் கைப்பையில் நிறைய சாக்லெட்டுகள் இருக்கும். நான் ரொம்ப இனிமையான, இனிப்பான பெண்,” என்று சிரிக்கிறார் அதிதி சங்கர்.
இவானா: தோசை பிடிக்கும்
‘லவ் டுடே’ நாயகி இவானாவுக்கு தோசை தான் மிகவும் பிடித்தமானது. இவரை நேரில் பார்க்கும் அனைவருமே, “சரியாக சாப்பிடமாட்டீர்களா, இவ்வளவு மெலிந்து போயிருக்கிறீர்களே?” என்றுதான் விசாரிப்பார்களாம்.
“இத்தனைக்கும் நான் நன்றாகச் சாப்பிடுவேன். எனினும் சாப்பிடுவதற்கான இடை வேளைகளில் நேர ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பேன்,” என்று சொல்பவர், புதுப்படம் ஒன்றில் ஏற்றுக் கொண்டுள்ள கதாபாத்திரத்துக்காக உடல் எடையை அதிகரிக்கப் போகிறாராம்.
அளவோடு சாப்பிடும் வாணி
“எப்போதுமே கைநிறைய அள்ளி வைத்து சாப்பிடமாட்டேன். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சாப்பிடுவேன். செட்டிநாடு வகை உணவுகள்தான் எனக்குப் பிடிக்கும்,” என்கிறார் வாணி போஜன்.
எந்த ஊருக்குப் படப்பிடிப்புக்காச் சென்றாலும், அங்குள்ள பிரபலமான உணவு வகைகளை ருசி பார்ப்பாராம். அண்மையில் பாலித் தீவுக்குச் சென்றிருந்தேன். அங்கு ஸ்பெயின் நாட்டு உணவை ருசித்தேன். எனினும் நான் எதிர்பார்த்த அளவுக்கு ருசியாக இல்லை. அதேசமயம் அங்குள்ள சாலையோர உணவகங்களில் சாப்பிட்ட அனைத்து உணவு வகைகளுமே அருமை,” என்கிறார் வாணி போஜன்.
சமந்தா, ராய் லட்சுமி, காஜல் அகர்வால் உள்ளிட்ட கதாநாயகிகள் உணவைவிட உடற்பயிற்சிக்குதான் முன்னுரிமை அளிக்கின்றனர்.
மேலும் யோகாசனம், தியானம் என்றும் கவனம் செலுத்துகின்றனர். இவர்களைப் போன்ற நடிகைகள் ‘உணவே மருந்து’ என்ற கொள்கையையும் தீவிரமாகப் பின்பற்றுகின்றனர்.
சில நடிகைகள் மனதுக்குப் பிடித்தமான அனைத்து உணவுகளையும் ஒருபிடி பிடிக்கின்றனர். அதன் பிறகு வழக்கத்தைவிட கூடுதல் நேரம் உடற்பயிற்சி செய்யத் தவறுவதில்லை.
மூத்த நடிகைகளான நதியா, சிம்ரன் போன்றோர் இன்றளவும் உடற்பயிற்சிக்கும் உணவுக் கட்டுப்பாட்டுக்கும் முன்னுரிமை அளித்து வருகின்றனர்.

