ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘காவாலா’ பாடலுக்கு தமன்னா ஆடியுள்ள நடனம் பிரபலமாகி வருகிறது.
17 ஆண்டுகளாக ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று வருத்தத்துடன் இருந்து வந்த தமன்னா, இந்த வாய்ப்பு எப்படிக் கிடைத்தது என அண்மையில் ஒரு பட விழாவில் மனம் திறந்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
“தாய்லாந்து நாட்டிற்கு நான் சுற்றுலா சென்றிருந்த போது ‘ஜெயிலர்’ பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் என்னை அழைத்துப் பேசினார். ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாகக் கூறியவுடன் ஒரு காட்சி கொடுத்தாலும் நானும் நடிப்பதற்கு சம்மதம் என்று தெரிவித்துவிட்டேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது 17 ஆண்டுகால ஏக்கம் இந்தப் படம் மூலம் நிறைவேறியுள்ளதாகக் கூறியுள்ள தமன்னா, மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் உருவாகி வரும் ‘போலா ஷங்கர்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் நேற்று வெளியானது.
இதனிடையே, முன்னணி நடிகர்களிடம் தான் கேட்க விரும்பும் கேள்விகள் குறித்தும் தமன்னா பகிர்ந்துகொண்டுள்ளார்.
அவர் கூறும்போது, “எனக்கு விஜய்யிடம் கேள்வி கேட்கும் வாய்ப்பு வந்தால் ‘தளபதி 68’ படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்பேன். அந்தப் படத்தில் நான் நடிப்பதாக வரும் தகவலில் உண்மையில்லை. ஆனால் அதில் நடிக்க எனக்கு விருப்பம் இருக்கிறது.
“அஜித் நன்றாக சமைப்பார். படப்பிடிப்பின்போது அவர் இட்லி செய்து தந்தார். அந்த மிருதுவான இட்லியை எங்கேயும் சாப்பிட்டது கிடையாது. அடுத்து எப்போது எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்? என்று கேட்பேன். சாப்பிட மட்டுமன்று, அவர் ‘பைக்’ சாகசத்துக்கு கூப்பிட்டாலும் போய்விடுவேன்.
“தனுசைப் பார்க்கும்போதெல்லாம், ‘மும்பைக்கு எப்போது வந்தாலும் தொலைபேசியில் அழையுங்கள்’ என்று சொல்வேன். ஆனால் அவர் அதனைச் செய்யவே மாட்டார். எனவே இந்தமுறையும் அதே கேள்வியைக் கேட்பேன்.
தொடர்புடைய செய்திகள்
“சூர்யாவை நேரில் பார்த்தால் ‘கங்குவா’ படத்தின் கதை என்ன? என்று கேட்பேன்’’ என்று கலகலப்பாகப் பேசினார்.

