விரல்விட்டு எண்ணக்கூடிய படங்களில் மட்டுமே நடித்துள்ளார் மிர்ணா மேனன். மலையாளத் திரையுலகில் இருந்து கோடம்பாக்கத்துக்கு இறக்குமதியான இளம் நடிகைகளின் பட்டியலில் ‘ஜெயிலர்’ படம் மூலம் இணைந்துள்ளார் மிர்ணா.
கடந்த 2020ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பிக் பிரதர்’ படத்தில் அறிமுகமான இவர் தமிழில் தற்போது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், ‘ஜெயிலர்’ பட வாய்ப்பு சற்றும் எதிர்பாராத வகையில் அமைந்தது என்கிறார்.
இவர் நடித்த இரண்டு தெலுங்குப் படங்களைப் பார்த்த பிறகு ‘ஜெயிலர்’ இயக்குநர் நெல்சன் திலீப்குமார் வாய்ப்பு அளித்ததாகச் சொல்கிறார்.
“நெல்சனின் உதவியாளர் திடீரென தொடர்புகொண்டு பேசியதும் எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. இருப்பினும் மிகப்பெரிய வாய்ப்பு தேடி வந்திருப்பதை மட்டும் தெளிவாகப் புரிந்துகொண்டேன்.
“படத்தில் ஒப்பந்தமான அந்த நொடியில் இருந்து ரஜினி எனும் மிகப்பெரிய நடிகரைச் சந்திக்கும் வரை ஒருவித பதற்றமும் படபடப்பும் மனதில் நிறைந்திருந்தது.
“இந்தப் படத்துக்காக மொத்தம் 45 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருந்தேன். ரஜினியுடன் அருகருகே நின்று பேசுவதும் நடிப்பதும் எனக்கே கனவுபோல் இருந்தது. அந்த நாள்களை மறக்கவே இயலாது.
“அறுபது வயதைக் கடந்த பிறகும் ரஜினியிடம் காணப்படும் சுறுசுறுப்பும் அவரது உழைப்பும் என்னை அசர வைத்தன. எல்லாருக்கும் இதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்துவிடாது. அவருடன் இணைந்து நடித்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்,” என்கிறார் மிர்ணா.
தொடர்புடைய செய்திகள்
திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இணையத் தொடர்களில் நடிக்கவும் தயக்கமின்றி ஒப்புக்கொள்ளும் இவர், கடந்த ஆண்டு ‘ஆனந்தம்’ என்ற தொடரில் நடித்துள்ளார்.
‘ஜீ’ தொலைக்காட்சியில் ஒளியேறிய அத்தொடரில் இவர் ஏற்று நடித்த பார்வதி என்ற கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
“இணையத்தொடர், திரைப்படம் என எதுவாக இருந்தாலும் எனது உழைப்பும் நடிப்பும்் மாறப் போவதில்லை. அனைத்து படைப்புகளும் வெற்றிபெற வேண்டும் என எதிர்பார்ப்புடனும் ஆசையுடனும்தான் எல்லா கலைஞர்களும் உழைக்கிறார்கள். எனவே தொடர், திரைப்படம் என்ற பாகுபாடு ஏதும் இல்லை.
“அதேசமயம் திரைப்படங்களில் பணியாற்றும்போது சில கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும். இணையத் தொடர்களில் எந்தவிதமான நெருக்கடிகளும் இன்றி, நிதானமாகத் திட்டமிட்டுச் செயல்படலாம்,” என்கிறார் மிர்ணா.
ஜெயிலர் படப்பிடிப்பின்போது கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி ரஜினியுடன் பல விஷயங்களைப் பேசியதாகக் குறிப்பிடுபவர், இமயமலை பயணம் குறித்து ரஜினி பல ஆச்சரியமான தகவல்களைபை் பகிர்ந்து கொண்டதாகச் சொல்கிறார்.
“ரஜினி சாரின் தனிப்பட்ட விருப்பங்கள், பிடித்தமான திரைப்படங்கள் குறித்து நிறைய பேசினோம். அவரது இமயமலைப் பயணங்கள், ஆன்மிக ஆர்வம் குறித்து பல கேள்விகளைக் கேட்டேன். எல்லாவற்றுக்கும் பொறுமையாகப் பதில் அளித்தார்.
“அவர் எத்தகைய புத்தகங்களைப் படிப்பார் என்பதையும் அறிந்துகொண்டேன். தன்னைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொள்ளும் அதே வேளையில், நம்மைப் பற்றியும் தெரிந்துகொள்ள அவர் ஆர்வம் காட்டுகிறார். நாம் அவரிடம் கேட்கும் அதே கேள்விகளைத்தான் அவர் நம்மிடமும் கேட்கிறார் என்பது வியப்பாக உள்ளது. இதன் மூலம் தன்னை ஒரு சராசரி மனிதராக வெளிப்படுத்தவே அவர் விரும்புகிறார் என்பதை உணர்ந்துகொண்டேன்.
“நான் மலையாளத்தில் நடித்த ‘பிக் பிரதர்’ படத்தை அவர் பார்த்துள்ளார். அந்தப் படம் குறித்தும் அதில் எனது நடிப்பு குறித்தும் அவர் பேசிய சில வார்த்தைகளைக் கேட்டபோது கனவுலகில் மிதப்பதுபோல் இருந்தது,” என்கிறார் மிர்ணா.
முதல் நிலை கதாநாயகி என்று பெயரெடுப்பதைவிட நல்ல நடிகை என்று ரசிகர்கள் தன்னை வாழ்த்தினால் போதும் என்று குறிப்பிடுபவர், தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் நடிக்க விரும்புவதாகச் சொல்கிறார்.
“புது முகங்களுடன் இணைந்து நடிக்கும்போது கூடுதல் சுதந்திரம் கிடைக்கிறது. அத்தகைய குழுவில் உள்ள அனைவருமே வெற்றிக்காக கூடுதல் உழைப்பைத் தருகிறார்கள்.
“தமிழில் நான் நடித்த புர்கா படத்துக்கான கதை, திரைக்கதை தொகுப்பை இரண்டு மாதங்களுக்கு முன்பே தந்துவிட்டனர். அதனால் மிகவும் சௌகரியமாக இருந்தது.
“கேமராவைப் பார்த்து நடிக்க வேண்டும் என சிலர் அறிவுறுத்தினர். இப்போது கேமரா முன்பு எவ்வாறு நடிக்க வேண்டும் என்பதற்கான நுணுக்கங்களை ஓரளவு கற்றுத் தேர்ந்துள்ளேன்,” என்கிறார் மிர்ணா.

