இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் ‘விடாமுயற்சி’ படம் தொடர்பான புதிய அறிவிப்புகளுக்காக அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், எதிர்வரும் 18ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக வெளியான தகவலை படத்தின் தயாரிப்புத்தரப்பு மறுத்துள்ளது.
படப்பிடிப்பு இல்லாத நாள்களில் சுற்றுப்பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவது அஜித்தின் வழக்கம். அந்த வகையில், அண்மையில் லண்டன் சென்றிருந்தார். அங்கு சில நாள்கள் தங்கிய பின்னர் சென்னை திரும்பிய அவர், அடுத்து நார்வே நாட்டுக்குச் சென்றுள்ளார்.
அங்கிருந்து வரும் 20ஆம் தேதிதான் மீண்டும் சென்னை திரும்புவார் என்றும் அதன் பிறகே ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இயக்குநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இயக்குநர் மகிழ்திருமேனி சொன்ன கதையில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டும் என அஜித் கூறியதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், லண்டனில் இருந்து சென்னை திரும்பியதும் மகிழ்திருமேனி தாம் செய்த மாற்றங்களுடன் மீண்டும் கதையை விவரித்தாராம். அதைக் கேட்டு அவரைப் பாராட்டிய அஜித், படப்பிடிப்புக்குத் தயாராகிவிடலாம் என்று உற்சாகமாகக் கூறியதாகத் தெரிகிறது.
கதைப்படி, சில முக்கிய காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க வேண்டியுள்ளது. எனவே, லண்டனில் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என லைகா நிறுவனம் கூறிய போதிலும், அஜித் தனக்கு ஹைதராபாத் நகரில் முதல் காட்சியை எடுக்க வேண்டும் எனக் கூறியதாகத் தகவல்.
இம்முறை அஜித் ஜோடியாக திரிஷாவை ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. எனினும், மற்றொரு நாயகியாக தமன்னா நடிக்க வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில், அஜித்துக்காக ஒட்டுமொத்த படக்குழுவும் காத்திருக்கிறது. நார்வேயில் இருந்து அவர் நாடு திரும்பிய அடுத்த நாளே படப்பிடிப்பில் பங்கேற்க அவர் திட்டமிட்டுள்ளாராம்.
இம்முறை சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு இயக்குநரிடம் அவர் கூறியிருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில், இப்படத்தில் அஜித்தின் தோற்றம் எப்படி இருக்கும் என்று அறிவதில் அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அண்மையில், விமான நிலையம் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ‘டி-சட்டை’ அணிந்து இளமையாகக் காட்சி அளித்தார் அஜித்.
‘விடாமுயற்சி’ படத்திலும் அவர் அத்தகைய தோற்றத்தில்தான் காட்சி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இயக்குநர் மகிழ் திருமேனி கதையில் செய்துள்ள மாற்றங்கள் அஜித்துக்கு மனநிறைவை அளித்திருக்கிறது. எனவே கதாநாயகி, மற்ற நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட மற்ற அனைவரையும் இயக்குநரே தனது திருப்பத்துக்கு ஏற்ப முடிவு செய்யட்டும் எனக் கூறிவிட்டார். அதனால் மகிழ் திருமேனி தரப்பு அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது.
“அநேகமாக செப்டம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளது. முதலில் சண்டைக் காட்சிகளைப் படமாக்கிவிட்டு மற்ற காட்சிகளில் கவனம் செலுத்தலாம் என இயக்குநர் முடிவு செய்துள்ளார்.
“இதற்கு அஜித்தும் பச்சைக்கொடி காட்டிவிட்டார். புதிய தோற்றத்தில் அஜித் தன் ரசிகர்களை நிச்சயம் கவர்வார். விடா முயற்சிக்கு அவர் சிறந்த உதாரணம். இதை உறுதி செய்யும் வகையில் இப்படம் உருவாகிறது,” என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
இதையடுத்து அடுத்தக்கட்ட அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.