தாம் அடுத்து நடிக்க உள்ள ஐந்து திரைப்படங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார் சூர்யா. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வரும் அவர், அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
வாய்ப்பு கிடைக்கும்போது தனது ரசிகர்களுடன் கலந்துரையாட சூர்யா தவறுவதில்லை. அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அவர் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
‘கங்குவா’ படம் தாம் எதிர்பார்த்ததைவிட நூறு மடங்கு சிறப்பாக உருவாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“நான் நடிக்க உள்ள 43வது படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும். வெற்றிமாறன் தற்போது ‘விடுதலை 2’ படத்தை எடுத்து வருகிறார். அந்தப் படம் முடிந்ததும் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடங்கும்.
“இதனிடையே ‘விக்ரம்’ படத்தில் நான் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தனிப் படம் உருவாக உள்ளது. அந்தப் படத்துக்காக லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை எனக்கு பிடித்துள்ளது. ‘ரோலக்ஸ்’ படத்தை எடுத்து முடித்த பிறகு ‘இரும்புக்கை மாயாவி’ படத்தில் நடிக்க இருக்கிறேன்,” என்றார் சூர்யா.
‘விக்ரம்’ படத்தின் இறுதிப் பகுதியில் ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரத்துடன் தொடர்புடைய காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்தக் கதாபாத்திரம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது.
எனவே, இந்தக் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஒரு படத்தை உருவாக்கி நடிக்க வேண்டும் என சூர்யாவுக்கு அவரது ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது ரசிகர்களின் விருப்பம் நிறைவேறும் என சூர்யா உறுதி செய்துள்ளார்.
‘ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தை மெருகேற்ற வேண்டும் என்பதிலும் அவர் முனைப்பாக உள்ளாராம்.
மேலும், ‘வாடிவாசல்’ படம் கைவிடப்பட்டதாகப் பரவிய வதந்திக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. எனினும் வெற்றிமாறன் முன்பே ஒப்புக்கொண்ட படங்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டதால், சூர்யா சலிப்படைந்துவிட்டதாகவும் அதனால் ‘வாடிவாசல்’ படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாகவும் கூறப்பட்டது.
‘இரும்புக் கை மாயாவி’ படம் தனது திரையுலகப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் என நம்புகிறார் சூர்யா. எனினும் இப்படத்துக்கான முன்னேற்பாடுகளைச் செய்வதே பெரும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அனைத்தும் தயாராகும் பட்சத்தில் இப்படத்துக்காக இயக்குநர் தரப்பு கேட்கும் கால்ஷீட்டை தர சூர்யா தயாராக உள்ளார் என்றும் இந்தப் படம் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் உருவாகும் என்றும் தெரிகிறது.
சூர்யா தற்போது குடும்பத்துடன் மும்பையில் குடியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திப் படங்களில் நடிக்க அவர் விரும்புவதாகவும் அதன் காரணமாகவே மும்பை சென்றுள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இது முழுக்க உண்மையல்ல என்றும் ஜோதிகாவுக்கு இந்திப் படங்கள், இணையத் தொடர்களில் நடிப்பதற்கான புது வாய்ப்புகள் தேடி வருவதாலேயே அவர் மும்பைக்கு சென்றுள்ளார் என்றும் மற்றொரு தகவல் கூறியது.
இந்நிலையில், தாம் மும்பையில் நிரந்தரமாக குடியேறியதாக வெளிவந்த தகவலை மறுத்துள்ளார் சூர்யா. ரசிகர்களுடனான சந்திப்பின்போது இதுகுறித்து ஒரு ரசிகர் எழுப்பிய கேள்விக்கு சூர்யா வெளிப்படையாகப் பதில் அளித்தார்.
“நான் மும்பையில் குடியேறவில்லை. எனது குழந்தைகள் அங்கு தங்கிப் படித்து வருகிறார்கள். அதனால் அவர்களைப் பார்ப்பதற்காக அவ்வப்போது மும்பை சென்று திரும்புகிறேன்,” என்றார் சூர்யா.
இதற்கிடையே ‘கங்குவா’ படத்துக்காக சூர்யா அதிகம் மெனக்கெட்டுள்ளாராம். கடும் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு தேவை என்று இயக்குநர் கேட்டுக் கொண்டதை அடுத்து, முழு அர்ப்பணிப்புடன் அவர் படத்துக்காகப் பங்களித்துள்ளாராம்.
இது தொடர்பாக ஒரு காணொளியை வெளியிட இப்படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அது விரைவில் வெளியாகும் என்றும் அதைப் பார்த்த பிறகு சூர்யா எத்தகைய அர்ப்பணிப்புடன் திரையுலகில் பணியாற்றுகிறார் என்பது தெரியவரும் என்றும் படக்குழுவினர் கூறுகின்றனர்.
ஆக மொத்தத்தில், சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க உள்ளன.