‘ஜவான்’ படம் மூலம் இந்தித் திரையுலகில் அறிமுகமாகிறார் அனிருத். இந்தப் படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தில் இடம்பெறும் இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளனர்.
‘ஹையோடா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாடலைத் தமிழில் அனிருத் பாடி உள்ளார். இதன் இந்திப் பதிப்பை அர்ஜித் சிங் பாடி இருக்கிறார்.
பட நாயகன் ஷாருக்கானும் நாயகி நயன்தாராவும் காதல் வயப்பட்டு பாடுவதாக இப்பாடல் திரையில் சித்திரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காட்சிகளும் அனிருத்தின் இசையும் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
ஏற்கெனவே ‘ஜவான்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வந்த எடம்’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இரண்டாவது பாடலுக்கு வரவேற்பு கிடைத்திருப்பது அனிருத் தரப்பை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
‘ஜவான்’ படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, தீபிகா படுகோன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

