தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘மந்தகம்’: காவல்துறை, குண்டர் கும்பல் இடையே மோதல்

2 mins read
564caf72-8f36-466f-af6f-b9414ad53b44
‘மந்தகம்’ படச் சுவரொட்டி. - படம்: ஊடகம்

‘மத்தகம்’ என்ற கவனம் ஈர்க்கும் தலைப்பில் உருவாகும் இணையத் தொடரில் மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் அதர்வா. இவருடன் மோதும் வில்லன் கதாபாத்திரத்தை ‘ஜெய் பீம்’ மணிகண்டன் ஏற்றுள்ளார்.

பிரசாந்த் முருகேசன் இயக்கும் இணையத் தொடர் இது. இவர் ஏற்கெனவே ‘கிடாரி’ படத்தை இயக்கியவர். பின்னர் கௌதம் மேனனுடன் இணைந்து ‘குயின்’ இணையத் தொடரை இயக்கினார்.

இம்முறை தலைப்பைப் போலவே கதைக்களத்தையும் வித்தியாசமாக அமைத்துள்ளதாகச் சொல்கிறார் பிரசாந்த் முருகேசன்.

“மந்தகம் என்பது யானையின் முன் நெற்றிப் பகுதியைக் குறிக்கிறது. பாறையில் மோதினாலும் உடையாத அளவுக்கு வலிமை வாய்ந்தது. யானையின் மூளையைக் காக்கக்கூடியதாகவும் இருக்கிறது.

“இந்தக் கதையில் காவல்துறை, குண்டர்கள் என இரு குழுக்களின் மோதல் பரபரப்பாக இருக்கும்.

“இரு தரப்புமே ஒருவரை ஒருவர் விஞ்சுவதற்கு வியூகங்களை வகுக்கிறார்கள். நேரடியாகக் கதையின் கருவைப் பிரதிபலிக்காமல் அதற்கு ஓர் உருவகமாக இருக்க வேண்டும் என விரும்பினேன். அப்படித்தான் இந்தத் தலைப்பை தேர்ந்தெடுத்தோம்,” என்கிறார் பிரசாந்த் முருகேசன்.

கதைப்படி அசோக் ரத்னகுமார் என்கிற காவல் அதிகாரியாக அதர்வாவும் ‘பட்டாளம்’ சேகர் என்கிற குண்டர் கும்பலின் தலைவனாக மணிகண்டனும் நடித்துள்ளனர்.

இருவரது தலைமையிலான இரண்டு குழுக்களும் ஒரு நீண்ட இரவில் சந்திக்கிறார்கள். அப்போது என்ன நிகழ்கிறது என்பதுதான் கதையாம்.

ஏறக்குறையாக முப்பது மணி நேரத்துக்குள் நடந்து முடியும் இக்கதையில், எதிரெதிர் துருவ வாழ்க்கையில் இருக்கும் இக்குழுக்கள் சந்தித்து மோதிக்கொள்ள வேண்டிய சூழல் ஏன் உருவானது என்பதை விறுவிறுப்பாக காட்சிப்படுத்த உள்ளனர்.

“அதர்வாவைப் பொறுத்தவரை மிகுந்த அர்ப்பணிப்பும் ஆர்வமும் உள்ள கதாநாயகன். இந்தப் படத்துக்காக அவர் கூடுதலாக மெனக்கெட்டுள்ளார் என்பது அவர் மீதான மதிப்பை உயர்த்துகிறது. “மணிகண்டனும் தனது கதாபாத்திரத்தை மெருகேற்றும் வகையில் உழைத்தார்.

“எழுத்தாளர் வேல.ராமமூர்த்தியை ‘மதயானைக் கூட்டம்’ திரும்பிப் பார்க்க வைத்தாலும், தற்கால தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத கலைஞராக அவரை மாற்றியது ‘கிடாரி’ படம்தான் என்று உறுதியாகச் சொல்வேன். அவர் எனது இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்கிறார் பிரசாந்த் முருகேசன்.

குறிப்புச் சொற்கள்