“ஒவ்வொருவரின் தலையெழுத்தும் முன்பே தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது என்று சொல்வார்கள். நான் அதை முழுமையாக நம்புகிறேன்,” என்கிறார் ராஷி கண்ணா.
எந்தத் துறையாக இருந்தாலும் பெண்களை மிக எளிதாக யாரும் அங்கீகரிப்பதில்லை என்று அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பெண்கள் எந்த நேரத்திலும் விழிப்புடன் இருக்க வேண்டும். போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் பெண்களை பலர் குறைத்து மதிப்பிடுகிறார்கள்.
“பெண்களாலும் பலவற்றைச் சாதிக்க இயலும். எனினும் உயர்ந்த பதவிகள், பொறுப்புகள் என்று வரும்போது அவர்களை அங்கீகரிக்கத் தவறுகிறார்கள். இதனால் பெண்கள் பெரிதும் போராட வேண்டியுள்ளது,” என்று சொல்லும் ராஷி கண்ணா, இதுவரையிலான தமது திரையுலகப் பயணம் மனநிறைவு தரும் வகையில் உள்ளது என்கிறார்.
வெற்றி, தோல்விகள் குறித்து தாம் அதிகம் யோசிப்பதில்லை என்றும் நிகழ்காலத்தில் என்ன நடக்கிறது என்பதில் மட்டும் அக்கறை செலுத்துவது நல்லது என்றும் சொல்கிறார்.
“எப்போதும் மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதைப் பற்றிதான் அதிகம் யோசிப்பேன்.
“ஒருவேளை திரைத்துறைக்கு வராமல் போயிருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று பலரும் கேட்பதுண்டு. சினிமா வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால் என்ற கேள்விக்கே இடமில்லை. எனக்கு நடிப்பு தவிர வேறு எந்த எண்ணமும் இருந்ததில்லை.
“ஆனால் நடிகையாக வேண்டும் என்பதைத்தான் இலக்காகக் கொண்டிருந்தேன். அவ்வாறே நடந்திருக்கிறது. அதனால்தான் தலைவிதி என்பதை பெரிதும் நம்புகிறேன்,” என்று சொல்லும் ராஷி கன்னா, திருமண வாழ்க்கை குறித்து இன்னும் யோசிக்கவில்லை என்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
“கடந்த ஓரிரு ஆண்டுகளாக இந்தக் கேள்வியைத்தான் அதிகம் கேட்கிறார்கள். தற்போது எனது முழுக் கவனமும் தொழில் மீதுதான் குவிந்துள்ளது. திருமணம் குறித்த தெளிவு இன்னும் வரவில்லை. அத்தகைய தெளிவு வந்த பின்னர் தகவல் தெரிவிப்பேன்.
“முன்பெல்லாம் திரைப்பட நடிகைக்கு திருமணம் என்ற அறிவிப்பு வெளிவந்தால் அத்துடன் அவர்களுடைய திரைப்பயணம் முடிவுக்கு வந்துவிடும். ஆனால் இப்போது நிலைமை மாறி உள்ளது. திருமணமான பிறகும்கூட நடிகைகளுக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகள் வருகின்றன. இதையெல்லாம் யோசித்துப் பார்த்துதான் எனது எதிர்காலம் குறித்த முடிவுகளை எடுப்பேன்,” என்கிறார் ராஷி கண்ணா.
திரையுலகில் பாலியல் தொல்லைகள் அதிகரிப்பதாக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களை தாம் தொடர்ந்து கவனித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், திரைத்துறை கவர்ச்சியான உலகம் என்பதால் அனைவரும் பார்வையும் அதன் மீது பதிந்துள்ளது என்கிறார்.
“அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்குப் பாலியல் தொல்லை இருக்கவே செய்கிறது. கவர்ச்சி உலகம் என்பதால் அது தொடர்பான சிறு விஷயங்களைக்கூட பூதக்கண்ணாடி வைத்து பார்க்கிறார்கள்.
“இப்போது எல்லாம் பெண்களுக்கும் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது நன்கு தெரிந்திருக்கிறது,” என்கிறார் ராஷி கண்ணா.
திரையுலகில் எத்தகைய சவால்களை எதிர்கொள்கிறீர்கள் என்ற கேள்வி அவ்வப்போது தம்மிடம் எழுப்பப்படுவதாகக் குறிப்பிடுபவர், மற்ற துறைகளைப் போலவே திரைத்துறையிலும் சவால்களும் சிக்கல்களும் உள்ளன என்கிறார்.
“ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது அந்தப் படம் வெற்றி பெறுமா என்பது தெரியாது. படம் தோல்வி அடைந்தால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
“தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும் நாங்கள் விமர்சிக்கப்படுவோம். எனினும் அவற்றை எல்லாம் கடந்து வந்தால்தான் திரையுலகில் நிலையான இடத்தைப் பிடிக்க முடியும்,” என்கிறார் ராஷி கண்ணா.


