நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு சிகிச்சை பெற்றும் பூரணமாக குணமாகவில்லை.
இதையடுத்து, அமெரிக்கா சென்று சிகிச்சை பெற அவர் முடிவு செய்துள்ளார். ஓராண்டு காலம் திரையுலகில் இருந்து விலகி தமது ஆரோக்கியத்தில் முழுக் கவனம் செலுத்த அவர் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்காக ஏற்கெனவே நடிக்க ஒப்பந்தம் செய்து இருந்த படங்களுக்கு வாங்கிய முன்பணத்தை அவர் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள ‘குஷி’ படம் செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தையொட்டி ஹைதராபாத் நகரில் இசை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் கலந்துகொண்டு நடனமாடினர்.
பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய சமந்தா, “நான் மீண்டும் ஆரோக்கியத்தோடு திரும்பி வருவேன்’‘ என்றார்.
“படங்களில் ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காகவே கஷ்டப்பட்டு நடிக்கிறோம். குஷி படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது’‘ என்றும் சமந்தா கூறினார்.
விஜய்தேவரகொண்டா பேசும்போது, “சமந்தா முகத்தில் சிரிப்பைப் பார்க்க ஆசைப்படுகிறேன். இந்தப் படத்தில் நடிக்க மிகவும் கஷ்டப்பட்டார். அவருக்கு மயோசிடிஸ் பாதிப்பு தீவிரமாக இருந்தது.
“கடுமையான வேதனையை அவர் அனுபவித்தார். இன்னும் சமந்தா முழுமையாகக் குணமடையவில்லை. ஆனாலும் சிரித்த முகத்தோடு இருக்கிறார்,’‘ என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புன்னகையுடன் இப்படத்துக்கான படப்பிடிப்பை தொடங்கினோம். 60 விழுக்காடு படப்பிடிப்பை முடித்துவிட்டோம். 30 - 35 விழுக்காடு படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருந்தது.
“அப்படிப்பட்ட நிலையில் சமந்தாவின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. அவர் தமக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறினார். அப்போது அதை நானும், இயக்குநர் ஷிவாவும் அதைப் பெரிதாக எடுத்துகொள்ளவில்லை.
“நீங்கள் அழகாகத்தானே இருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன பிரச்சினை எனக் கேட்டோம். ஆனால் அதன் பிறகு அவரின் வலியைப் புரிந்துகொண்டோம். அப்போதுதான் நான் சமந்தாவின் உடல்நிலை குறித்து அறிந்துகொண்டேன். அவர் அதைப்பற்றி தொடக்கத்தில் எதுவும் வெளிப்படுத்தவில்லை,” என்றார் விஜய்தேவரகொண்டா.

