பெண்களை நசுக்க நினைக்கும் ஆண்களை சும்மாவிடக் கூடாது என்கிறார் வாணி போஜன்.
மணிப்பூர் கலவரம், சென்னையில் ரயில் நிலையங்களில் பெண்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து ஊடகங்களில் படித்தபோது மனதுக்குள் கொந்தளிப்பு ஏற்பட்டதாக அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல, பெண்களைத் தொந்தரவு செய்த பல ஆண்களை தாம் துரத்தித் துரத்தி அடித்திருப்பதாக வாணி கூறியிருப்பது அவரது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
“மேலோட்டமாகப் பார்ப்பதற்கு நானும் அமைதியான பெண்தான். ஆனால் தவறுகள் நடக்கும்போது அவற்றைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியாது.
“என் கண்ணெதிரே சில ஆடவர்கள் தவறு செய்தபோது விரட்டியடித்திருக்கிறேன். ஒருமுறை ரயில் நிலையத்தில் தகாத முறையில் நடந்துகொண்ட ஒருவனை துரத்தினேன்.அதற்குள் ஏதோ ஒரு ரயில் வரவே, அதில் ஏறி தப்பித்துவிட்டேன்,” என்று முந்தைய சம்பவத்தை கோபத்துடன் நினைவுகூர்ந்துள்ளார் வாணி.
பெண்களை முன்னேறவிடாமல் தடுக்கும் போக்கு மாற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள அவர், ஆண்கள் மீதான கோபம் நாளுக்குநாள் தன் மனதில் வலுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் ஒட்டுமொத்த ஆண்கள்மீது தமக்குக் கோபம் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.
“பிரபல நடிகை என்பதற்காக அமைதியாக இருக்க முடியாது. நம்மைச் சுற்றி நடப்பவற்றை உற்றுக் கவனிக்க வேண்டும். எல்லை மீறும்போது அவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
“மணிப்பூரில் நடந்த கொடுமைகளுக்கு மோசமான சிந்தனை கொண்ட ஆண்கள்தான் காரணம் என உறுதியாகச் சொல்வேன். நான், படப்பிடிப்புக்கு சொகுசுக் காரில் வந்திறங்கி, நடித்து முடித்ததும் அதே காரில் ஏறிச் செல்லும் சராசரி பெண்ணல்ல. இந்தச் சமூகம் குறித்தும் பெண்கள் முன்னேற்றம் குறித்தும் எனக்கு மிகுந்த அக்கறை உள்ளது,” என்று சொல்லும் வாணி, தன்னிடம் எழுப்பப்படும் எத்தகைய கேள்விகளுக்கும் பதில் அளிக்கத் தயங்குவதில்லை.
சேலைதான் வாணிக்குப் பிடித்தமான உடை, தொலைக்காட்சித் தொடரில் நடித்தபோது, தாம் ஏற்றிருந்த கதாபாத்திரத்துக்கு சேலை அணி்ந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியதாம். அதற்கு நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க, சேலை தனது வாழ்க்கையில் பிரிக்க முடியாத அம்சமாகிவிட்டதாகச் சொல்கிறார்.
குறுகிய காலத்தில் தாம் நிறைய சொத்துகளை சேர்த்துள்ளதாக சமூக ஊடகங்களில் சிலர் பதிவிடுவது உண்மையல்ல என்றும் ஊட்டியில் எஸ்டேட் வாங்கியுள்ளதாக வெளியான தகவலும் பொய் என்றும் கூறுகிறார் வாணி.
“ஊட்டியில் உள்ள தேயிலைத் தோட்டம் என் அப்பா வாங்கியது. அவர் கடுமையாக உழைத்து வாங்கிய சொத்துக்கு நான் சொந்தம் கொண்டாட முடியாது. உண்மையில், அதை வைத்துதான் எங்கள் குடும்பம் வாழ்கிறது.
“அதேசமயம் எந்தச் சூழலிலும் எனது தேவைக்காகப் பெற்றோரை எதிர்பார்க்கக்கூடாது என்பதுதான் எனது கொள்கை. அதில் எந்த மாற்றமும் இருக்காது,” என்கிறார் வாணி.
எது குறித்தும் அதிகமாக உணர்ச்சி வசப்படுவதுதான் தமது பலம், பலவீனம் என்று குறிப்பிடுபவர், இன்று வரை தனது இந்த குணாதிசயத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்கிறார்.
தமது நடிப்பு நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தால் அதுவே போதும் என்று குறிப்பிடுபவர், சூர்யாவுடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க விரும்புவதாகச் சொல்கிறார்.
“மீண்டும் சின்னத்திரையில் நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். தொலைக்காட்சி என்பது எனது தாய் வீடு போன்றது. வாய்ப்பும் சூழ்நிலையும் அமைந்தால் மீண்டும் சின்னத்திரை தொடர்களில் நடிப்பேன். கௌரவ கதாபாத்திரங்களில் நடிக்கவும் வாய்ப்புண்டு,” என்கிறார் வாணி போஜன்.

