கதை மீது ரஜினிகாந்த் வைத்திருந்த நம்பிக்கைதான் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்குக் காரணம் என்று அதன் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூறியுள்ளார்.
மேலும், ரனிஜியின் நடை, உடை, பாவனையும் அருமையாக இருந்தது வெற்றியை உறுதி செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“வெளியீட்டுக்கு முன்பு முழுப் படத்தையும் பார்த்த ரஜினி, ‘நான் எதிர்பார்த்ததைவிட பத்து மடங்கு அருமையான படமாக உருவாகியுள்ளது’ என்று பாராட்டினார். அப்போது இந்தப் படத்தை இயக்கியதற்கான முழு மனநிறைவு கிடைத்துவிட்டது.
“ஏனெனில் இந்தப் படம் வெற்றி பெறுமா என்று நிறைய பேர் என்னைச் சந்தேகமாகப் பார்த்தனர். பலவிதமான தகவல்களைப் பரப்பினர்.
“எனினும் இந்தியத் திரையுலகின் முக்கியமான புள்ளியான ரஜினி என்ற நடிகர், அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, நான் சொன்ன கதையைக் கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். இந்தப் படத்தின் வெற்றிக்கு அவர்தான் காரணம்,” என நெல்சன் கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஜெயிலர் படம் இதுவரை ரூ.375 கோடி வசூல் செய்துள்ளதாக அதன் தயாரிப்புத் தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதையடுத்து நெல்சனுக்கு விலை உயர்ந்த கார் ஒன்றைப் பரிசளிக்க அந்நிறுவனமும் ரஜினியும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல். ‘விக்ரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கமல் விலையுயர்ந்த காரை பரிசளித்திருந்தார்.