‘மாமன்னன்’ படம் தொடங்கப்பட்டபோதே அது நிச்சயம் வெற்றி பெறும் என்று தாம் உறுதியாக நம்பியதாகக் கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் மாரி செல்வராஜ் மிகுந்த அக்கறையுடன் செதுக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘மாமன்னன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஐம்பது நாள்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதற்காக ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் அப்படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இப்படக்குழுவினர் பங்கேற்ற வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி, திரையுலகில் மீண்டும் நடிக்கப் போவதில்லை என்று தாம் எடுத்துள்ள முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
“படப்பிடிப்பின்போது இரண்டு முறை எனக்கு அடிபட்டது. கதாநாயகனுக்கு அடிபட்டால் படம் வெற்றிபெறும் என்று கீர்த்தி சொன்னார். அதுபோலவே வெற்றி பெற்றுள்ளது.
“வடிவேலு இந்தப் படத்தில் நடிக்க முன்வந்திருக்கா விட்டால் இந்த முயற்சியைக் கைவிட்டு வேறு படம் எடுத்திருப்போம். ஃபஹத் பாசில் இந்தப் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.
“எனது முதல் படமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ வெற்றி பெற்றதும் கடைசி படமான மாமன்னன் வெற்றி பெற்றதும் மறக்க முடியாத அனுபவங்கள். இன்னும் நான் நடிக்க வேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டாலும் இனி நடிப்பதாக இல்லை. அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை,” என்றார் உதயநிதி.
தொடர்புடைய செய்திகள்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், ‘மாமன்னன்’ திரைப்படம் தமக்குள் முப்பது ஆண்டுகளாக தேங்கிக்கிடந்த ஆதங்கம் என்றார்.
“ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று யோசித்திருக்கிறேன். இசையால் அதைச் சரிசெய்ய முடியவில்லை.
“அதனால் அதை யார் செய்கிறார்களோ அவர்களோடு சேர்ந்துவிட்டேன். வடிவேலு நடித்த ஒரு குறிப்பிட்ட காட்சியைப் பார்த்த பிறகுதான் இந்தப் படத்தை மிகச் சிறப்பாக கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது,” என்றார் ரஹ்மான்.
இந்த நிகழ்ச்சியின்போது படத்தில் பணியாற்றியவகள், திரையிட்டவர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட சுமார் 250க்கும் மேற்பட்டவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

