விஜய் தொலைக்காட்சி மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நகைச்சுவைக் கலைஞர் பாலா தன் சொந்த செலவில் மலைக்கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கித் தந்துள்ளார்.
கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, திரைப்படங்களில் நடிப்பது என பல்வேறு வகையிலும் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைத்து பல நல்ல செயல்களில் ஈடுபட்டுள்ளார் பாலா.
ஆதரவற்றோர் இல்லங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கித் தருவது, ஏழை மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவது என இவர் செய்யும் உதவிகளின் பட்டியல் நீண்டு வருகிறது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம், குன்றி ஊராட்சி மலை கிராமத்திற்கு தன்னார்வ அமைப்பின் மூலம் இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கியுள்ளார் பாலா.
அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனம் இன்றி மிகவும் அவதிப்பட்டு வந்த இக்கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.10 லட்சம் செலவில் இலவச ஆம்புலன்ஸ் அளித்துள்ள பாலாவுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
“12 மலைக் கிராமங்களுக்கு இந்த ஆம்புலன்ஸ் பயன்படும். இப்பகுதியில் எட்டாயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு பாம்பு உள்ளிட்ட வன விலங்குகளால் பாதிப்பு ஏற்பட்டாலோ, உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டாலோ, சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல, 16 கி.மீட்டர் தொலைவில் இருந்து தான் ஆம்புலன்ஸ் வர வேண்டும்.
“இனி மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக யாரிடமும் நான் பண உதவி கேட்கவில்லை. நான் சேமித்த பணத்தை சேர்த்து வைத்து வாங்கிக் கொடுத்துள்ளேன்,” என்கிறார் பாலா.


