திரையுலகில் ஒருவர்கூட உதவவில்லை: கவர்ச்சி நடிகையின் கண்ணீர்க் கதை

திரையுலகில் ஒருவர்கூட உதவவில்லை: கவர்ச்சி நடிகையின் கண்ணீர்க் கதை

2 mins read
efbabd1f-70c8-461a-a04b-7da37d554ec5
கணவர், மகன்களுடன் டிஸ்கோ சாந்தி. - படம்: ஊடகம்

கணவர் காலமான பிறகு கடும் பொருளியல் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக முன்னாள் கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தி தெரிவித்துள்ளார்.

தன் கணவரிடம் உதவி கேட்டு பணம் பெற்றவர்கள் அதை திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் கண்ணீர்மல்க அவர் குறிப்பிட்டுள்ளார்.

பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகள் டிஸ்கோ சாந்தி. குடும்பச் சூழ்நிலை காரணமாக இவரும் திரையுலகில் அறிமுகமானார். ‘டிஸ்கோ’ வகை நடனத்தில் கைதேர்ந்தவர் என்பதால், சாந்தி என்ற பெயருடன் ‘டிஸ்கோ’ என்பதும் ஒட்டிக்கொண்டது.

டிஸ்கோ சாந்தியின் தங்கை லலிதாகுமாரியும் ஒரு நடிகைதான். லலிதா குமாரி நடிகர் பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவி ஆவார்.

தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் டிஸ்கோ சாந்தி. கணவருடன் ஹைதராபாத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீஹரி மரணம் அடைந்தார்.

தனது கணவர் இறந்துபோகும் முன்பு நிறைய பேருக்குப் பண உதவி செய்ததாகவும் அவர்களில் ஒருவர்கூட நேர்மையாகப் பணத்தைத் திருப்பித்தரவில்லை என்றும் டிஸ்கோ சாந்தி கூறியுள்ளார்.

“ஆனால் நாங்கள் சிலருக்குப் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. எங்களிடம் இருந்த நகை, கார், நிலம் எல்லாவற்றையும் விற்று கடனை அடைத்துவிட்டோம். ஒரு காருக்கு தவணை கட்ட முடியாமல் வங்கி திருப்பி எடுத்துக் கொண்டது.

“இப்போது என்னிடம் கணவர் கட்டிய தாலி மட்டுமே மிச்சம் இருக்கிறது. இரண்டு வீடுகள் உள்ளன. வீடுகள் மூலம் கிடைக்கும் வாடகைத் தொகையை வைத்துதான் காலத்தை ஓட்டுகிறோம்,” என்கிறார் டிஸ்கோ சாந்தி.

திரையுலகைச் சேர்ந்த ஒருவர்கூட தங்களுக்கு உதவவில்லை என்று குறிப்பிடுபவர், தமது கணவர் செய்த நல்ல காரியங்கள் பயனற்றுப் போனது வருத்தம் அளிப்பதாகச் சொல்கிறார்.

அவரது இப்பேட்டியைக் கண்ட திரை ரசிகர்கள், “இதுவும் கடந்து போகும், கவலைப்படாதீர்கள்,” என ஆறுதல் கூறி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்