அழகான தோற்றம் என்பது திரையுலகில் பெண்கள், ஆண்கள் என இருதரப்பினருக்குமே முக்கியமான அம்சமாகக் கருதப்படுகிறது.
நடிகர்கள் சிலர் படத்தின் கதைக்கேற்ப, கட்டுடல், குறிப்பாக, ‘சிக்ஸ்பேக்ஸ்’ எனப்படும் வயிற்றுப்பகுதி தசைகளை உறுதியாகக் காட்டும் உடற்கட்டைப் பெற, கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது உண்டு.
கங்குவா படத்துக்காக சூர்யா ‘சிக்ஸ்பேக்’குடன் காட்சியளிக்கும் படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.
சிறுத்தை சிவா கங்குவா படத்தை இயக்குகிறார். இந்தப் படம் ஒன்பதாம் நூற்றாண்டில் தொடங்கி 21ஆம் நூற்றாண்டு வரை தொடர்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தி நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கங்குவா படத்தில் முழுமையாக வரலாற்றுக் காட்சிகள் இடம்பெறாது எனவும், அது படத்தின் ஒரு பகுதிதான் எனவும் தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது, தற்போதைய காலகட்டத்தில் கோவாவில் நடக்கும் பொழுதுபோக்குப் படம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
‘கங்குவா’ படத்தின் ‘கிளிம்ப்ஸ்’ காணொளி அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சூர்யா ‘சிக்ஸ்பேக்’குடன் இருக்கும் படம் அதிகம் பரவிவருகிறது. ஏற்கெனவே வாரணம் ஆயிரம், அயன் படங்களில் ‘சிக்ஸ்பேக்’குடன் காட்சியளித்தார் சூர்யா. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் கங்குவா படத்தில் ‘சிக்ஸ்பேக்’குடன் தோன்றவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் பணிபுரிந்துள்ள பாடலாசிரியர் மதன் கார்க்கி, “கங்குவா ஒரு புதிய உலகம். புதுமையான அனுபவம். ‘கிளிம்ப்ஸ்’ காணொளியில் வந்த மாறுபட்ட தமிழ்ப் பேச்சுதான் படத்தில் இருக்கும். ஆனால் கண்டிப்பாக அனைவருக்கும் புரியும்படி இருக்கும்,” என்று சொல்லியுள்ளார்.
இதற்கிடையே, தமிழ்த் திரையுலகின் மற்ற முன்னணிக் கதாநாயகர்களும் தங்கள் அடுத்தடுத்த படங்களின் வெற்றிக்காகத் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
சிம்பு தனது 48வது படத்திற்காக லண்டனில் தற்காப்புக் கலைப் பயிற்சி எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் STR 48 படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார்.
பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், STR 48 படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் ஒப்பந்தமாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வேளையில், தனது அடுத்த படத்தின் இயக்குநரை அறிவித்திருக்கிறார் தனுஷ். அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தனுஷின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. அதிரடிக் காட்சிகள் நிறைந்துள்ள டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் டிசம்பர்15 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அருண் மாதேஸ்வரன் மீதான அதீத நம்பிக்கையினால் தனது அடுத்த படத்திலும் இந்த வெற்றிக் கூட்டணி தொடரும் என்கிறார் தனுஷ். இது அவரது சொந்தத் தயாரிப்பாக அமையக்கூடும்.
அநேகமாக தனுஷின் 51வது படமாக இது இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. தனுஷ் தற்போது தனது 50வது படத்தினை இயக்குவதில் மும்முரமாக இருக்கிறார்.

