நடிகர் விஜய்யின் 68வது படத்துக்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து தமன் பணிபுரியவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் 68வது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குவார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் நாயகியாக ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்று வரும் இசையமைப்பாளர் தமன் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
போட்டியாளர் ஒருவர் பாடிய பிறகு பேசிய தமன், “என் வாழ்க்கையில் யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் இருவரிடம் மட்டுமே இணைந்து பணியாற்றும் வாய்ப்பு வேண்டும் என்று கேட்டுள்ளேன். விரைவில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் படத்தில் பணியாற்றவுள்ளேன்,” எனக் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா, வெங்கட் பிரபு இயக்கும் விஜய் படமா எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த தமன், தற்போது ஏதும் சொல்ல முடியாது என்று கூறினாலும் அப்படித்தான் இருக்கும் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.

