‘திருமணத்துக்குப் பிறகே பிரச்சினைகள் அதிகம்’

இன்றுள்ள சமூகச் சூழலில் பலர் திருமணத்துக்குப் பிறகு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அவற்றில் இருந்து வெளியே வர மனநல ஆலோசனை அவசியம் என்கிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன்.

ஏற்கெனவே ‘போட்டாபோட்டி’, ‘தெனாலிராமன்’, ‘எலி’ என மூன்று படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர். நான்காவது படத்தில் மூன்று ஜோடிகளை மையமாக வைத்து கதை சொல்லப் போகிறார். படத்துக்கு ‘இறுகப்பற்று’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதன்மை ஜோடியாக நடிக்க, விதார்த், தேன் அபர்ணதி, ஸ்ரீ - சானிய ஐயப்பன் ஆகியோர் நடித்துள்ளனர்.

“இன்று சமூகத்தில் நடக்கும் கதையைத்தான் படமாக்குகிறேன். குறிப்பாக, என்னைச் சுற்றி இருக்கும் நண்பர்கள் வாழ்க்கையில் திருமணத்துக்குப் பிறகு பல்வேறு பிரச்சினைகள். அவர்களில் சிலருடைய வாழ்க்கை விவாகரத்துவரை போனதுண்டு.

“திருமணத்துக்குப் பிறகு அதிகம் சிரமப்படுகிறார்கள் என்று தோன்றியது. பாதிக்கப்பட்ட சிலருக்கு மனநல ஆலோசனைகள் (கவுன்சிலிங்) வழங்கினேன். அதன் மூலம் சிலர் தெளிவடைந்தார்கள்.

“நான்கைந்து பேருக்குச் சொன்ன விஷயத்தை திரைப்படம் மூலம் சொன்னால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. என்னுடைய அடுத்த படம் இந்த மாதிரியான கதைக்களத்துடன்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுடன் கதையை எழுதினேன். இறுகப்பற்று இப்படித்தான் தொடங்கியது,” என்கிறார் யுவராஜ் தயாளன்.

மூன்று கதாநாயகர்களை வைத்து தெளிவாக, சிக்கலின்றி கதை சொல்ல முடியுமா என்று பலரும் சந்தேகம் எழுப்புவதாகக் குறிப்பிடுபவர், குடும்ப உறவுகளைப் பற்றி நூறு பேரை வைத்தும் கதை சொல்லலாம் என்கிறார்.

தாம் எழுதியுள்ள கதைக்கு மூன்று கதாநாயகர்கள் என்பது குறைவு என்றும் படம் பார்க்கும்போது தமது கருத்தில் உள்ள நியாயம் புரியும் என்றும் சொல்கிறார்.

“விக்ரம் பிரபுவும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என விரும்பினேன். விக்ரம் பிரபு கதை கேட்ட அடுத்த நொடியில் இருந்து ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். விதார்த் என்னுடைய நீண்ட நாள் நண்பர். மற்றொரு நாயகனான ஸ்ரீ என்னிடம் உதவி இயக்குநராக பணியாற்ற வந்தவர். இப்போது நடிகராகவும் பங்களிக்கிறார்.

“மூன்று பேருமே கதை மீது நம்பிக்கை வைத்து என்னுடன் இணைந்துள்ளனர். அதனால்தான் சிக்கலின்றி படத்தை எடுக்க முடிந்தது. மூவரும் இதற்கு முன் நடித்ததைவிட இந்தப் படத்தில் நடிப்பில் அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுள்ளனர் எனலாம்.

“மூன்று கதாநாயகர்கள் எனும்போது ஒப்பீட்டளவில் யார் நன்றாக நடித்தார் என்பதை எளிதில் சொல்லிவிட இயலும். அதனால் ஒவ்வொருவரும் கவனத்தோடு போட்டிபோட்டு நடித்தனர்.

“வடிவேலுவுடன் இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றிய அனுபவம் உள்ளது. அவர் எப்படிப்பட்ட நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு காட்சியை விவரித்துவிட்டால் போதும், அதை மிகச்சிறப்பாக மெருகேற்றிவிடுவார். அவரும் இணைந்தது பெரும் பலம்,” என்கிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். அனைத்துமே ரசிகர்களைக் கவரும் வகையில் வித்தியாசமான மெட்டுகளில் அமைந்துள்ளனவாம்.

“காதல் படங்கள், பேய் கதைகள், அடிதடிப் படங்களுக்கு நிறைய முன்னுதாரணங்கள் உள்ளன. ஆனால் குடும்ப உறவுகளில் உள்ள சிக்கல்களை அலசும் படங்களின் எண்ணிக்கை குறைவு.

“அதனால் இப்படிப்பட்ட கதைகளைப் படமாகத் தயாரிக்க அதிகமானோர் முன்வருவதில்லை. ஆனால் எனது தயாரிப்பாளர் கதை மீதுள்ள நம்பிக்கையால் தயாரிக்கின்றனர். கணவன், மனைவி இடையேயான பிரச்சினைகளை விரிவாக அலசும் தரமான படைப்பாக இது உருவாகும்,” என்கிறார் யுவராஜ் தயாளன்.

இந்நிலையில், மூன்று நாயகிகளில் ஒருவராக நடிப்பதில் தமக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

இவர் தற்போது தெலுங்கில் ‘சைந்தவ்’, தமிழில் ‘கலியுகம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

“தமிழில் கடைசியாக ‘விட்னஸ்’ படத்தில் நடித்திருந்தேன். அடுத்து ‘கலியுகம்’ படத்தில் மிக கனமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளேன். பசி, பட்டினிக்கு முன்பு மனித நேயம் அறவே மறைந்து போய்விட்டது எனலாம். வறுமைக்கும் தீவிரவாதத்துக்கும் எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. எனவே இந்தப் படம் இன்றைய சூழலுக்கு ஏற்ற படைப்பாக இருக்கும்.

“அதேபோல் ‘இறுகப்பற்று’ படமும் குடும்பச் சிக்கல்களை அலசும் அருமையான படம். இதில் எனக்கான கதாபாத்திரத்தில் ரசித்து, அனுபவித்து நடித்துள்ளேன்,” என்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!