சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற முதல் தெலுங்கு நடிகர்

சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற முதல் தெலுங்கு நடிகர்

2 mins read
2060193a-c05a-4886-8584-c31e544f670c
அல்லு அர்ஜுன். - படம்: ஊடகம்

‘புஷ்பா தி ரைஸ்’ தெலுங்குப் படத்தில் நடித்த அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். இந்த விருதைப் பெறும் முதல் தெலுங்கு நடிகர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.

செம்மரக் கடத்தலைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வசூலில் சாதனை படைத்தது. மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படம் என விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது.

மிக மாறுபட்ட நடிப்பை வழங்கியுள்ளதாக அல்லு அர்ஜுன் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார். உலக அளிவில் சுமார் 400 கோடி ரூபாய் வசூல் கண்ட இப்படத்தின் இரண்டாவது பாகத்திலும் அல்லு அர்ஜுன்தான் நாயகன்.

இத்தனை ஆண்டுகால தெலுங்குத் திரைப்பட வரலாற்றில், எந்தவொரு தெலுங்கு நடிகரும் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றதில்லை என்ற தகவல் இப்போதுதான் ரசிகர்களுக்குத் தெரியவந்துள்ளது.

“இது உண்மையா, பொய்யா என்ற விவாதம் நடந்துகொண்டிருக்கும் வேளையில், அல்லு அர்ஜுன் தங்களுடைய நீண்டநாள் ஏக்கத்தைப் போக்கியுள்ளதாக அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தெலுங்குத் திரையுலகத்தினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், புஷ்பா பட இயக்குநர் சுகுமாரை கட்டியணைத்து அல்லு அர்ஜுன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காணொளிப் பதிவு வெளியாகி உள்ளது.

அதை தெலுங்கு ரசிகர்கள் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர். இம்முறை தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமக்கு விருது அறிவிக்கப்பட்டதும் தெலுங்குத் திரையுலகம் அதிக விருதுகளைப் பெற்றிருப்பதும் மகிழ்ச்சி அளிப்பதாக அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்