பார்த்திபன்: 120 அனைத்துலக விருதுகளைவிட தேசிய விருது பெரிது

பார்த்திபன்: 120 அனைத்துலக விருதுகளைவிட தேசிய விருது பெரிது

2 mins read
522c622b-bcb7-4f2c-838c-cfc2df7bcb92
‘இரவின் நிழல்’ படத்தின் சுவரொட்டி. - படம்: ஊடகம்

‘இரவின் நிழல்’ படத்தில் இடம்பெற்ற ‘மாயவா தூயவா’ பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக அப்படத்தின் இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான சமூக ஊடகப் பதிவில், 120 அனைத்துலக விருதுகளைப் பெற்றுள்ள போதிலும் இந்திய தேசிய திரைப்பட விருது கிடைத்திருப்பதுதான் பெருமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பார்த்திபன் இயக்கி, நடித்திருந்த ‘இரவின் நிழல்’ மிக மாறுபட்ட முயற்சி, படைப்பு என விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. இந்நிலையில், அதில் இடம்பெற்றுள்ள பாடலின் மூலம் ஸ்‌ரேயா கோஷலுக்கு விருது கிடைத்துள்ளது குறித்து பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

“நிலவில் சந்திரயான் இறங்கும்போது விஞ்ஞானிகள் மட்டும் அல்ல, இஸ்‌ரோ கட்டடத்தில் பணிபுரியும் அனைவருமே, மகிழ்ந்திருப்பார்கள். பெருமைப்பட்டிருப்பார்கள்.

“அப்படிப் பெருமைக்குரிய தேசிய விருது, ‘இரவின் நிழல்’ படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடிய ‘மாயவா தூயவா’ என்கிற பாடலுக்கு அறிவிக்கப்பட்டபோது, இதற்கு முழு முதல் காரணமான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றி.

“இஸ்ரோவில் பணிபுரிந்த நிறைய ஊழியர்களில் ஒருவன் போல, அந்த படத்திற்காக உழைத்த ஊழியர்களில் ஒருவனாக, நானும் மகிழ்கிறேன், பெருமை கொள்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட காத்திருப்பு. கிட்டத்தட்ட 120 அனைத்துலக விருதுகள் எல்லாமே கிடைத்தும் கூட, நம் தேசிய விருது என்கிறபோது அதன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதில் என்னுடைய படத்தின் பெயர் இடம்பெற்றதில் மகிழ்ச்சி. அதில் என் பெயர் இருப்பதும் மகிழ்ச்சி,” என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

ரஹ்மான், ஸ்‌ரேயா கோஷல், படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்