விருது அறிவிப்பும் சர்ச்சைகளும்

3 mins read
884e3181-846c-45dd-b0d2-f7c0d0e81ccb
ஆலியா பட். - படம்: ஊடகம்

2021ஆம் ஆண்டுக்கான இந்திய தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து விருது வென்றவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் விருதுகள் தொடர்பாக சில சர்ச்சைகளும் வெடித்துள்ளன.

சிறந்த படத்துக்கான தேசிய விருது ‘ராக்கெட்ரி’க்கு கிடைத்துள்ளது.

நடிகர் மாதவன் இயக்கியுள்ள முதல் படம் இது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திரைக்கு வந்தது.

இப்படத்தை இயக்கியதோடு, நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்தும் இருந்தார் மாதவன். மேலும், சூர்யா, ஷாருக்கான் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களை ஏற்றிருந்தனர்.

இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருது வென்று அசத்தியுள்ள நடிகர் மாதவனுக்கு வாழ்த்துகள் குவிந்துள்ளன.

விருதைப் பகிர்ந்து கொள்ளும் நாயகிகள்

இம்முறை சிறந்த நடிகைக்கான விருதை இரு கதாநாயகிகள் பெற்றுள்ளனர். ‘கங்குபாய் கத்தியவாடி’ இந்திப் படத்தில் நடித்த ஆலியா பட், ‘மிமி’ இந்திப் படத்திற்காக கீர்த்தி சனோன் ஆகிய இருவரும் தேசிய விருதைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தில் நடித்த பல்லவி ஜோஷிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இசையமைப்பாளர்

‘புஷ்பா ‘ படத்திற்காக அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் தேவிஸ்ரீ பிரசாத்திற்குச் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் வென்றுள்ளனர்.

இருவருக்கும் நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “மனமார்ந்த வாழ்த்துக்கள் அல்லு அர்ஜுன். சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது வென்றதால் தெலுங்குத் திரைப்படத் துறையில் சரித்திரம் படைத்துள்ளீர்கள். மிகவும் மகிழ்ச்சி தேவிஸ்ரீ பிரசாத். இது ஒரு தகுதியான அங்கீகாரம்,” என குறிப்பிட்டுள்ளார்.

வெடித்தது புது சர்ச்சை

தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருதையும் ‘காஷ்மீர் பைல்ஸ்’ வென்றுள்ளது.

இந்தப் படம் வெளியானபோது அதில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தினர்.

இந்நிலையில், இப்படத்துக்கு விருது அறிவிக்கப்பட்டதும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘கொமுரம் பீமுடோ’ பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை கால பைரவா வென்றுள்ளார்.

‘ஷெர்ஷா’ திரைப்படம் சிறப்பு ஜூரி விருதை வென்றது. மணிகண்டன் இயக்கிய ‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீகாந்த் தேவாவுக்கு விருது

‘கருவறை’ என்ற ஆவணப்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த கல்வி திரைப்படமாக ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ என்ற ஆவணப்படத்திற்கு விருது கிடைத்துள்ளது.

புறக்கணிக்கப்பட்ட தமிழ்த் திரையுலகம்

இதற்கிடையே, தேசிய விருதுத் தேர்வில் தமிழ்த் திரையுலகம் புறக்கணிக்கப்பட்டதாக ஒரு தரப்பினர் புகார் எழுப்பியுள்ளனர்.

தரமான பல படங்களை விருதுத் தேர்வுக் குழுவினர் கண்டுகொள்ளவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

‘கர்ணன்’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘ஜெய்பீம்’, ‘மாநாடு’, ‘வினோதைய சித்தம்’ போன்ற தரமான, மாறுபட்ட படைப்புகளை கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்துக்கு மட்டும் மொத்தம் ஐந்து தேசிய விருதுகள் கிடைத்தன. இதுதவிர ‘மண்டேலா’ திரைப்படம் இரண்டு விருதுகளை வென்றது.

இந்நிலையில், 2021ஆம் ஆண்டும் பல்வேறு தரமான திரைப்படங்கள் தமிழில் வெளியாகின. இதனால் 69ஆவது தேசிய விருதுகளிலும் தமிழ்ப் படங்கள் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பை எல்லாம் தவிடுபொடி ஆக்கும் விதமாக தேசிய விருது அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

இம்முறை ‘கடைசி விவசாயி’ படத்துக்கு இரண்டு, ‘இரவின் நிழல்’ படத்துக்கு ஒன்று என்று மூன்று விருதுகள் மட்டுமே கிடைத்துள்ளன.

சிறந்த நடிகர், துணை நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளில் தமிழ்ப் படங்களுக்கு ஒரு விருதுகூட கிடைக்கவில்லை. ‘ஜெய் பீம்’ படத்துக்காக சூர்யாவுக்கு விருது கிடைக்கும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ‘கர்ணன்’ படத்துக்காக தனுஷ் விருது வெல்வார் என்ற கணிப்பும் நிலவியது. ஆனால் ‘புஷ்பா’ படத்தில் நடித்த அல்லு அர்ஜுன் சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்