சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழ்த் திரையுலகைப் புகழ்ந்து தள்ளினார்.
விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குஷி’.
இந்த படத்தில் ஜெயராம், வெண்ணெலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, சச்சின் கெடேகர், ரோகினி மொல்லெட்டி, முரளி சர்மா, லட்சுமி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைத்து வருகிறார்.
படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கான விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் படத்தின் தலைப்பு பற்றிப் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, “விஜய் நடித்த ‘குஷி’ படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம். நடிகர் விஜய்யின் ‘குஷி’ படத்தை ரசித்தது போன்று நான் நடித்திருக்கும் ‘குஷி’ படத்தையும் மக்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன்,” என்று நம்பிக்கையுடன் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
“அதுவும், எனக்குப் பிடித்த நடிகரின் படத் தலைப்பை எனது படத்திற்கு வைத்ததில் மகிழ்ச்சி. ஆனால், இந்த இரண்டு படத்தின் கதைக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. தலைப்பு மட்டும்தான் ஒன்று, இரண்டும் வெவ்வேறு கதை,” எனத் தெளிவுபடுத்தினார்.
“வெற்றிமாறனின் அனைத்துத் திரைப்படங்களையும் ஒன்றுவிடாமல் பார்த்து இருக்கிறேன். மறுபதிப்புப் படம் என்று தெரியாமலேயே ரஜினி படங்களை ரசித்திருக்கிறேன். மேலும், நான் சமந்தாவின் ரசிகன். அவர் ஒரு நல்ல நடிகை,” என்று புகழ்ந்தார் விஜய் தேவரகொண்டா.
இந்நிலையில், ‘குஷி’ படப்பிடிப்பின்போது எடுத்த காணொளிகளை விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் சமந்தாவை விஜய் தேவரகொண்டா கட்டிப்பிடித்திருப்பார். தற்போது அக்காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
விஜய் தேவரகொண்டாவின் முன்னைய படங்களின் தோல்வி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து ஆறு தோல்விப் படங்களைக் கொடுத்தவர். தற்போது ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் ரூ.500 கோடி வசூலை எட்டியுள்ளார். சிரஞ்சீவியும் ஆறு, ஏழு தோல்விப்படங்களை தொடர்ந்து கொடுத்தவர்தான். ஆனால், சங்கராந்தியில் வெளியான அவரது படம் நல்ல வரவேற்பைப் பெற்றது,” என்று அவர் பதிலளித்தார்.
விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை, அதுபோல் சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான சாகுந்தலம் சரியான வெற்றியைப் பெறாத நிலையில், ‘குஷி’ திரைப்படம் இருவருக்கும் நல்ல வரவேற்பைக் கொடுக்கும் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

