[ο]விஜய்யுடன் இணையும் புது நாயகி
விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் பிரியங்காவுக்கு ரசிகர்கள் இப்போதே வாழ்த்து தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர்.
விஜய்யின் 68வது படத்தை கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கிறார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று குறிப்பிடுகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்புதிய படத்தில் விஜய் ஜோடியாக மீண்டும் பூஜா ஹெக்டே ஒப்பந்தமாவார் என்று கூறப்பட்டது. ஆனால் இயக்குநர் தரப்பு இதை மறுத்தது.
இந்நிலையில், பிரியங்கா அருள் மோகனை ஒப்பந்தம் செய்ய வெங்கட் பிரபு விரும்புவதாகத் தெரிகிறது. விஜய்யும் தயாரிப்பாளரும் இதற்கு ஒப்புதல் வழங்கியதை அடுத்து, பிரியங்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகத் தகவல்.
விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
[ο]ஷ்ருதி: கர்மாவின் விளையாட்டைப் பார்க்கப் போகிறீர்கள்
தொடர்புடைய செய்திகள்
கர்மா தன் வேலையைக் காட்டும் என்று சமூக ஊடகத்தில் ஷ்ருதி ஹாசன் பதிவிட்டுள்ளது ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
கர்மாவின் விளையாட்டைப் பார்க்கப் போகிறீர்கள் என்றும் அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பலர் தங்களுக்கான குழிகளை வெட்டி, அவற்றில் குதிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இதை நான் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு தான்.
“நாம் நமது வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கவேண்டும். என்னதான் இருந்தாலும் கர்மா நிச்சயம் தன் வேலையை காட்டும்,” என்று ஷ்ருதி மேலும் தெரிவித்துள்ளார்.
யாரை கர்மா தாக்கும், எதற்காக இந்தப் பதிவு என்பது குறித்து ஷ்ருதி எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.
தெலுங்கில் ‘ஹாய் நானா’ என்ற படத்திலும் ‘தி ஐ’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் ஷ்ருதி.
[ο]மனு ஆனந்த் படத்தில் இணைந்த ஆர்யா, கௌதம்
‘எஃப்.ஐ.ஆர்’ படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் ஆர்யாவும் கௌதம் கார்த்திக்கும் நடிக்கின்றனர்.
மஞ்சு வாரியர், அனகா, சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். கோடம்பாக்கத்துக்குப் புதிதாக வந்துள்ள திபு நினன் இசையமைக்கிறார்.
ஆர்யாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கௌதம் கார்த்திக்கும் இதுவரை ஏற்றிராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் தோன்றுவாராம்.
படத்துக்கான பூசை சென்னையில் நடைபெற்றது. அன்றைய தினமே படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டனர். முதலில் ஆர்யா தனியாக நடிக்கும் ஒரு காட்சி படமாக்கப்பட்டது.

