தென்னிந்திய திரையுலகில் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படும் கதாநாயகிகளின் பட்டியலில் ஸ்ரீலீலாவுக்கு முதன்மையான இடமுண்டு.
தமிழுக்கு எப்போது வருவார் என்று ஏக்கத்துடன் காத்துக்கிடந்த கோடம்பாக்க ரசிகர்களுக்கு நல்ல செய்தி.
விரைவில் வெளியீடு காண உள்ள ‘ஸ்கந்தா’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களைச் சந்திக்க உள்ளார் ஸ்ரீலீலா.
அந்த நாளுக்காக தாம் ஆவலுடன் காத்திருப்பதாகச் சொல்லும் இந்த இளம் நாயகியை, சமூக ஊடகங்களில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 2.4 மில்லியனைக் கடந்துவிட்டது. எந்த அறிமுக நாயகியும் மிகக் குறுகிய காலத்தில் இத்தனைப் பேரை வசீகரித்ததில்லை என்கிறார்கள் திரையுலக விவரப் புள்ளிகள்.
அடுத்த ஐந்து மாதங்களில் ஸ்ரீலீலா நடித்துள்ள ஐந்து படங்கள் அடுத்தடுத்து வெளியீடு காண உள்ளன.
தெலுங்கில் மட்டும் ஆறு புதுப்படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். ஸ்ரீலீலா கேட்ட ஊதியத்தைக் கொட்டிக்கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.
முதலில் ‘ஸ்கந்தா’ படம் பிள்ளையார் சதுர்த்தி அன்று வெளியாகிறது. இதையடுத்து ‘பகவந்த் கேசரி’ தெலுங்குப் படம் ஆயுத பூசை அன்று வெளியாகிறது.
தீபாவளிக்கு ‘ஆதிகேசவா’ படம் வெளியாகிறது. ‘தி எக்ஸ்ட்ராடினரி மேன்’ திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகிறது.
தொடர்புடைய செய்திகள்
இப்படிப் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகும் திரையுலக விவரப் புள்ளிகள், அண்மைக் காலத்தில் முன்னணி நடிகைகளின் படங்கள் அறிவித்தபடி வெளியீடு காணவில்லை எனச் சுட்டிக்காட்டுகின்றனர்.
“அந்த வகையில் ஸ்ரீலீலா மிக ராசியான நடிகை என்று கூறலாம். கடந்த காலங்களில் இவர் நடித்த ஐந்து படங்கள் வசூல் ரீதியில் வெற்றி பெற்றுள்ளன.
“மேலும், ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ப மிகக் கச்சிதமாக நடிக்கக்கூடிய திறமையும் ஸ்ரீலீலாவிடம் உள்ளது. தமிழிலும் அவர் முன்னணி நாயகியாக உருவெடுப்பார்,” என திரையுலக விவரப் புள்ளிகள் கூறுகின்றனர்.
மறைந்த நடிகைகள், திவ்யா பாரதி, ஸ்ரீதேவி, இன்றைய முன்னணி நாயகிகளான ராஷ்மிகா, பூஜா ஹெக்டே ஆகியோரின் தேர்ந்த கலவையாக அமைந்த தோற்றம்தான் ஸ்ரீலீலாவின் பலம் என்கிறார்கள் திரை விமர்சகர்கள்.
“அவரது இந்த அழகுத்தோற்றம்தான் ரசிகர்களை முதலில் ஈர்க்கும் அம்சமாக உள்ளது. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது ஸ்ரீலீலா இயல்பாக இருப்பதும் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது,” என்பதும் சிலரது கருத்தாக உள்ளது.
இந்நிலையில், தெலுங்கில் ஸ்ரீலீலாவுக்கு என தனி ரசிகர் கூட்டம் உருவாகி வருகிறது. அவர் நடிகை ராஷ்மிகா மந்தனாவை முந்திவிடுவார் என்று ரசிகர்கள் உறுதியாகச் சொல்கின்றனர்.
ஆனால், இதுபோன்ற போட்டிகளில் தமக்கு ஆர்வம் இல்லை என்கிறார் ஸ்ரீலீலா.
“போட்டி, சண்டைகளில் பங்கேற்க எனக்கு நேரமில்லை. நடிப்புதான் எனது தொழில் என தேர்வு செய்துவிட்டேன். எனது அந்த முடிவை நானே கெடுத்துக்கொள்ள முடியாது.
“எனக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி எவ்வளவு சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். ராஷ்மிகா உட்பட அனைத்து கதாநாயகிகளும் இப்படித்தான் செயல்படுகின்றனர்,” என்று பக்குவமாகப் பேசுகிறார் ஸ்ரீலீலா.
தமிழில் தமக்குரிய வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும் என நம்புவதாகச் சொல்பவர், குறிப்பிட்ட சில நாயகர்கள் என்று வட்டத்தைச் சுருக்கிக் கொள்ளாமல் அனைவருடனும் நடிக்க விரும்புவதாகச் சொல்கிறார்.
“தமிழில் மிகச்சிறந்த படைப்புகள் உருவாகி வருகின்றன. அவற்றைப் பார்த்து பிரமித்துப் போகிறேன். எனக்கு எடுத்த எடுப்பிலேயே பெரிய வாய்ப்புகள் தேடிவரும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. எனினும் எதுவும் நம் கையில் இல்லை. ஒருவேளை அத்தகைய வாய்ப்புகள் தேடிவரும் வாய்ப்பு உண்டு,” என்கிறார் இளம் நாயகி ஸ்ரீலீலா.