தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற கதாநாயகர்கள் ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
தங்கள் ரசிகர்களுக்காகவே, தொடர்ந்து நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் நடித்து வருகிறார்கள். எனவே, அவர்களின் படங்கள் வெளியானதும் குறுகிய காலத்திலேயே வசூலில் சாதனை படைத்து வருகின்றன என்றால் அது மிகையில்லை. இந்த ஆண்டு (2023) தமிழில் வெளிவந்த படங்களில் முதல் ஏழு நாள்களில் உலக அளவில் அதிக வசூலில் முன்னணி வகிக்கும் ஐந்து படங்களின் விவரங்கள் இதோ:
1.ஜெயிலர் :
ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது ‘ஜெயிலர்’ படம். நெல்சன் இயக்கிய இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, மிர்னா மேனன், ‘ரித்து ராக்ஸ்’ ரித்விக், சுனில், தமன்னா மற்றும் பலர் நடித்திருந்தனர். மேலும், புகழ்பெற்ற நடிகர்கள் மோகன்லால், ஷிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி முதல் ஏழு நாள்களில் உலக அளவில் ரூ.425.40 கோடி வசூல் செய்தது.
2.பொன்னியின் செல்வன் – 2 :
மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியான படம் ‘பொன்னியின் செல்வன் 2’. இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ‘ஜெயம்’ ரவி, கார்த்தி, திரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஷோபிதா துலிபாலா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், அஷ்வின், ரியாஸ் கான், லால் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி முதல் ஏழு நாள்களில் உலக அளவில் ரூ.261.60 கோடி வசூல் செய்தது.
3.வாரிசு :
விஜய் நடிப்பில் ஜனவரி 11ஆம் தேதி வெளியான படம் ‘வாரிசு’. வம்சி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி முதல் ஏழு நாள்களில் உலக அளவில் ரூ.210.40 கோடி வசூல் செய்தது.
தொடர்புடைய செய்திகள்
4.துணிவு :
அஜித் நடித்த ‘துணிவு’ படமும் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. எச். வினோத் இயக்கிய இப்படத்தில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி முதல் ஏழு நாள்களில் உலக அளவில் ரூ.146.85 கோடி வசூல் செய்தது.
5.வாத்தி :
தனுஷ் நடிப்பில் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியானது ‘வாத்தி’. வெங்கி அட்லூரி இயக்கிய இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன், சாய் குமார், சமுத்திரக்கனி, இளவரசு, ஹரீஷ் பெராடி, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி முதல் ஏழு நாள்களில் உலக அளவில் ரூ.70.20 கோடி வசூல் செய்தது.
இந்த ஆண்டு இதுவரை வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில், எதிர்பார்க்கப்பட்டதைப்போலவே அதிக வசூல் செய்த படங்கள் இவை.