[ο]சூர்யாவுக்கு ஜோடியாகும் அதிதி
‘மாவீரன்’ படத்தை அடுத்து மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் அதிதி சங்கர். அவர் அடுத்து சூர்யாவுடன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி இயக்குநர் சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் சூர்யா நாயகனாக நடிப்பது உறுதியாகி உள்ளது. இப்படத்தை தயாரிப்பதும் சூர்யாதான். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவாகும் இப்படத்துக்கான முதற்கட்ட பணிகளைத் தொடங்கிவிட்டார் இயக்குநர் சுதா. முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படத்தின் நாயகியை தேர்வு செய்யும் படலம் நடைபெற்று வந்தது. அதன் முடிவில் அதிதி சங்கர் கதைக்குப் பொருத்தமான நாயகியாக இருப்பார் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளனராம். இதையடுத்து அதிதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சுதா கொங்கரா கூறிய கதையைக் கேட்டு அசந்து போனாராம் அதிதி. மேலும், சூர்யாவுக்கு ஜோடி என்றதும் உற்சாகமாகிவிட்டாராம். ஏற்கெனவே சூர்யாவின் தம்பி கார்த்தியுடன் நடித்துள்ளார் அதிதி.
[ο]இருபது வயதில் பாலியல் தொல்லை: மனம் திறந்த ரெஜினா
திரையுலகில் உரிய வாய்ப்புகள் கிடைக்காத காலக்கட்டத்தில் தாம் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டதாக நடிகை ரெஜினா தெரிவித்துள்ளார். அச்சமயம் சிலரிடம் வாய்ப்பு கேட்டதாகவும் அவர்்களில் ஒருவர் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் எனக் கூறியதாகவும் பேட்டி ஒன்றில் ரெஜினா குறிப்பிட்டுள்ளார். “சில சமரசங்களுக்கு உட்பட்டால் வாய்ப்புகள் கிடைக்கும். இதற்குத் தயார் என்றால் நாம் தொடர்ந்து பேசலாம் என்று ஒரு திரையுலகப் பிரமுகர் கூறினார். “சம்பளம், ஒப்பந்தம் குறித்துதான் அவர் பேசுகிறார் என்று நினைத்து, எனது மேலாளர் தொடர்புகொள்வார் என்று அவரிடம் கூறினேன். அதன் பிறகு மேலாளர் மூலமாகத்தான் அந்தப் பிரமுகர் பாலியல் ரீதியில் பேசினார் என்பதே புரிந்தது,” என்று ரெஜினா கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் நடந்தபோது தமக்கு இருபது வயதுதான் ஆகியிருந்தது என்றும் தன்னைப் போன்றே வேறு சில இளம் நாயகிகளுக்கும் இவ்வாறு நேர்ந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
[ο]திருச்சிற்றம்பலம் படக்குழுவின் கொண்டாட்டம்
தொடர்புடைய செய்திகள்
‘திருச்சிற்றம்பலம்’ படக்குழுவினர் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து அப்படக்குழுவினர் ஒன்றுகூடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தனுஷுடன், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் இணைந்து நடித்த இந்தப் படம் விமர்சன, வசூல் ரீதியில் வெற்றி பெற்றது. மித்ரன் கே. ஜவகர் இயக்கி இருந்தார். படம் வெளியாகி ஓராண்டாகிவிட்ட நிலையில், படக்குழுவினர் ஒன்றுகூடி மகிழ்ந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

